Skip to main content

“சிங்கம் நாய்களை வேட்டையாடாது” - பட்டியலின ஐ.ஏ.எஸ் அதிகாரி குறித்து பா.ஜ.க எம்.பி சர்ச்சை கருத்து!

Published on 31/03/2025 | Edited on 31/03/2025

 

Uttarakhand Former Chief Minister's controversial comment on a Dalit IAS officer

சிங்கங்கள் நாய்களை வேட்டையிடாது என்று பட்டியலின ஆட்சியர் ஒருவரை, முன்னாள் முதல்வர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலத்தில், புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், சட்டவிரோத சுரங்கத் தொழில் இருப்பதாக ஹர்த்வார் பா.ஜ.க எம்.பியும், உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வருமான திரிவேந்திர சிங் ராவத் நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இது அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும், மாநில சுரங்கத் துறை செயலாளருமான பிரஜேஷ் சாண்ட், திரிவேந்திர சிங் ராவத் தவறாக சொல்கிறார் என்று கூறினார். அதனை தொடர்ந்து, திரிவேந்திர சிங் ராவத் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரஜேஷ் சாண்டின் மறுப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த திரிவேந்திர சிங் ராவத், “இதற்கு என்ன சொல்வது? சிங்கங்கள் நாய்களை வேட்டையாடுவதில்லை” என்று தெரிவித்தார். இவரது கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ளது. இந்தக் கருத்துக்குப் பின்னால், பிரஜேஷ் சாண்டியின் சாதி அடிப்படையிலான அவமதிப்பு என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஹரித்வாரின் ஜாத்வாடா பகுதியில், திரிவேந்திர சிங் ராவத்தின் கருத்துக்கு எதிராக ஒரு கண்டனப் பேரணி நடைபெற்றது.

இதற்கிடையில், உத்தரகண்ட் ஐஏஎஸ் சங்கம் நேற்று (30-03-25) அதன் தலைவர் ஆனந்த் பர்தன் தலைமையில் ஒரு அவசரக் கூட்டத்தை நடத்தியது. அந்த கூட்டத்தில், அனைத்து குடிமக்களைப் போலவே ஐஏஎஸ் அதிகாரிகளும் கண்ணியம் மற்றும் மரியாதைக்கு தகுதியானவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டது. 

சார்ந்த செய்திகள்