![ww](http://image.nakkheeran.in/cdn/farfuture/Gsfr7oPl54Qih0-9uZwEC7ZXaOGN7O4tCXqEKs85Pwg/1547109762/sites/default/files/inline-images/water_3.jpg)
நகராட்சி மக்களுக்கு குடி நீர் வழங்கும் நீர்த்தேக்கத் தொட்டியில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதால், அந்த நீரைக் குடிக்க வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ராமநாதபுரம் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக நகராட்சி சார்பாக ராமநாதபுரம் கோட்டாச்சியர் அலுவலகம் எதிரே சுமார் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி 25 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டு குடிநீர் கேசரித்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்ட போது நீரில் துர்நாற்றம் வீசியதை அடுத்து பொதுமக்கள் நகராட்சிக்கு கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் குடிநீர் மேல்நிலை தொட்டிக்கு சென்று பார்வையிட்ட போது ஆண் சடலம் அழுகிய நிலையில் மிதப்பதை அறிந்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து போலீசார் விசாரணையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் என்றும் அவரது வலது கையில் பிளேட்டுகளில் வெட்டப்பட்டு இருப்பதால் இச்சம்பவம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் பஜார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவம் நடந்து ஒரு வாரம் இருக்கலாம் என கூறப்படுவதால் குடிநீர் தொட்டியிலிருந்து வெளியான நீரை பருக வேண்டாம் என நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.