Skip to main content

விஷால் அரசியல்! இயக்குவது யார்?

Published on 14/09/2018 | Edited on 14/09/2018


 

​    ​Vishal



"தெருவில் நடக்கும் அநீதியைப் பார்த்து சும்மா இருக்கக்கூடாது. சும்மா இருந்தால் பிணத்துக்குச் சமம்'’-தனது பிறந்தநாள் விழா‘"இரும்புத்திரை'’படத்தின் 100-ஆவது நாள் விழாவில் பேசிய நடிகர் விஷால், சும்மா இருக்காமல் ‘"மக்கள் நல இயக்கம்'’என்ற அமைப்பைத் தொடங்கியிருக்கிறார்.
 

நடிகர் சங்கத்தின் செயலாளர், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என இரட்டைக் குதிரையில் சவாரி செய்யும் விஷால், அரசியல் கட்சித் தலைவராகவும் ஆகிவிட்டார். திடீரென அரசியல் களத்தில் விஷால் குதித்ததன் பின்னணி குறித்து சினிமா ஏரியாவில் விசாரித்தோம்...
 

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் நம்மிடம் பேசிய போது, ""நடிகர் சங்கத் தேர்தலையே பொதுத்தேர்தல் ரேஞ்சுக்கு பில்ட்-அப் கொடுத்து ஜெயித்தது விஷால் டீம். பதவிக்காலம் முடியும் நிலையிலும், கொடுத்த வாக்குறுதிகளில் பாதியைக்கூட விஷாலால் நிறைவேற்ற முடியவில்லை.


கடந்த ஆண்டு நடந்த நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவில் விஷாலுக்கு எதிராக வரிந்து கட்டினார் டி.ராஜேந்தர். விஷாலை நோக்கி ஆவேசமாக கேள்வி கேட்டபடி சிலர் மேடையை நோக்கிப் பாய ஆரம்பித்ததும், பொதுக்குழுவை பாதியிலேயே முடித்துவிட்டுக் கிளம்பினார் விஷால்.
 

சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில், எதிர்ப்பாளர்கள் யாரும் கலந்துகொள்ளாததால் கூட்டம் சுமூகமாக நடந்து முடிந்தது. நடிகர் சங்கத்தின் கட்டடம் கட்டி முடிக்க அவகாசம் தேவைப்படுவதால், சங்கத்தின் தேர்தலை ஆறு மாதத்திற்கு ஒத்தி வைத்து பொதுக்குழுவில் தீர்மானமும் நிறைவேற்றிவிட்டார் விஷால்.


கட்டடப் பணிகள் முழுமையாக முடிய 20 கோடி ரூபாய் தேவைப்படுவதால், வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சி மூலம் வசூல் பண்ணுவதாக விஷால் சொல்லியிருக்கார். ஏற்கனவே மலேசியாவில் நடந்த கலை நிகழ்ச்சி அட்டர் ஃப்ளாப் ஆனது. இனிமேல் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில், கட்சி தொடங்கிய கமலும் தொடங்கப் போகும் ரஜினியும் கலந்து கொள்வது சந்தேகம்தான்.
 

அவர்கள் இல்லாமல் கலெக்ஷன் தேறாது. அதனால் அரசியல் கட்சி தொடங்கினால் ஏகப்பட்ட கலெக்ஷன் ஆகும் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் நல இயக்கத்தை ஆரம்பிச்சிருக்காரு. ரிசல்ட் எப்படி இருக்குமோ தெரியல''’என்றார்.

 

Vishal



மற்றொரு தயாரிப்பாளரோ, ""தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷால் ஆனவுடன் "சின்னத் தயாரிப்பாளர்கள் செழிப்பாக வாழ ஏற்பாடு செய்வேன்'னு சொன்னார். ஆனால் சங்கத்தின் நிதியாக இருந்த ஏழரைக் கோடி ரூபாய், ரெண்டு கோடி ரூபாயாக ஆனதுதான் மிச்சம்.
 

நலிந்த தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியமும் கட். தனக்கு எதிராக ஒரு விஷயம் வெடித்தால், அதை டைவர்ட் பண்ணுவதற்காக ஸ்டண்ட் அடிப்பது விஷாலின் பழக்கம். அந்தப் பழக்கத்தில்தான் மக்கள் நல இயக்கத்தை ஸ்டார்ட் பண்ணிருக்காரு''’ என்கிறார்.
 

"இரும்புத்திரை'’படத்தை ரிலீஸ் பண்ணுவதற்கு முன்பு பலகோடி ரூபாய் கடன் பிரச்சினையில் சிக்கித் தவித்தார் விஷால். சிலபேருக்கு செட்டில் பண்ணினால்தான் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்ற நிலைமை.
 

அப்போது கை கொடுத்தவர், பிரபல ஃபைனான்சியரான மதுரை அன்பு. அதனால்தான் நடிகரும் டைரக்டருமான சசிகுமாரின் மைத்துனர் தற்கொலை வழக்கில் மதுரை அன்பு தேடப்பட்டு வந்த நேரத்தில், "எந்த அமைச்சர் வீட்டுக்குள் அன்பு இருந்தாலும், அந்த அமைச்சர் வீட்டை முற்றுகையிடுவேன்' என வீராவேசமாக பேசினாலும் ‘"இரும்புத்திரை'யின் ஆடியோ விழாவில், அன்புவின் தம்பி அழகரை தனது அருகில் அமர வைத்தார் விஷால்.


ஆனால் இப்போதோ டி.டி.வி.தினகரனின் அருளாசியால் அத்தனை கடன்களையும் விஷால் அடைத்துவிட்டதாக ஒரு தரப்பும், இல்லையில்லை... இன்னும் ஏகப்பட்ட கடன் நொம்பலத்தில் இருக்கிறார் என மற்றொரு தரப்பும் சொல்கிறது. தினகரனுக்கு விஷால் மேல் இவ்வளவு அக்கறை ஏன் என விநியோகஸ்தர் ஒருவர் விளக்கமாகச் சொன்னார்.
 

""இடைத்தேர்தலில் வேண்டுமானால் தினகரன் தனது பலத்தைக் காட்டி களத்தில் இறங்கலாம். ஆனால் பொதுத்தேர்தலிலோ, ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் சரிக்குச் சமமாக மோதும். அப்போது பிரபலமான சினிமா முகம் இருந்தால் கொஞ்சம் சமாளிக்கலாம் என்ற ஐடியாவில்தான் விஷால் மீது கரிசனம் காட்டுகிறார் தினகரன்.
 

சமீபத்துல தனக்கு நெருக்கமான ஒருவரிடம் கமல் பேசியபோது, "கட்சி ஆரம்பிச்சு இத்தனை மாசம் ஆச்சு. தொழில் அதிபர்கள் யாரும் நிதி தர்ற மாதிரி தெரியலையே' என சோர்வாக பேசிருக்காரு. தானும் கட்சி ஆரம்பிச்சா நிதியைக் கொண்டு வந்து கொட்டுவாங்கன்னு நினைக்குறாரு விஷால்.
 

3,000 ஓட்டுகள் இருக்கும் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வேறு, மக்கள் ஓட்டுப் போடும் தேர்தல் வேறு. இந்த உண்மை விஷாலுக்குத் தெரியுமான்னு தெரியல''’என்றார்.
 

"அணி சேர்வோம், அன்பை விதைப்போம்'’என கொடியில் வாசகம் பொறித்திருக்கிறார் விஷால். பார்ப்போம் யாரோடு அணி சேர்வார் என்று.
 

 


 

சார்ந்த செய்திகள்