விழுப்புரத்தில் சமீப காலங்களாக ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வரும் எழுதப்படிக்க தெரியாதவர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் அடுத்த ஆசாரக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஏழுமலை. இவர் கடந்த மாதம் 9-ம் தேதி விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த பெண் ஒருவர் தான் பணம் எடுத்து தருவதாகக் கூறி ஏழுமலையின் ஏடிஎம் கார்டையும் ரகசிய எண்ணையும் வாங்கி பயன்படுத்தி அவருக்கு தேவையான பணத்தை எடுத்துக் கொடுத்து அனுப்பியுள்ளார். சில நாட்கள் கழித்து ஏழுமலை அதே ஏடிஎம் கார்டை எடுத்துச் சென்று ஏடிஎம்மில் பணம் எடுக்க முயன்றபோது பணம் எடுக்க முடியவில்லை. உடனே அந்த கார்டை எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று விவரம் கேட்டுள்ளார் ஏழுமலை.
அப்போது வங்கி அதிகாரிகள் அந்த ஏடிஎம் கார்டை ஆய்வு செய்தபோது அது போலி ஏடிஎம் கார்டு என்று தெரிவந்தது. மேலும் உண்மையான ஏடிஎம் கார்டை பயன்படுத்தி யாரோ ஒருவர் அவரது கணக்கிலிருந்து ஏற்கனவே 5 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்ததாக விவரம் தெரியவர அப்போதுதான் அந்த பெண்ணிடம் ஏமார்ந்ததை ஏழுமலை உணர்ந்தார். இதுதொடர்பாக உடனடியாக விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவரது புகாரின் பேரில் மாவட்ட எஸ்.பி ராதாகிருஷ்ணன் தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட மோசடி பெண்ணை தீவிரமாக தேடி கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.
அதன்படி தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட ஏடிஎம்மில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதனடிப்படையில் திருச்சி அருகிலுள்ள கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 40 வயது சீதாலட்சுமி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் விவசாயி ஏழுமலையின் ஏடிஎம் கார்டை மோசடி செய்து பறித்துச்சென்று அவரது வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்சத்து 65ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்ததை ஒப்புக்கொண்டார். இதேபோன்று விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஏடிஎம் மையத்தில் லட்சுமி என்பவர் பணம் எடுக்க வந்தபோது அவரிடமும் மோசடியில் ஈடுபட முயன்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கைதுசெய்யப்பட்ட அந்த பெண்மணியிடம் இருந்து பணம், நகைகள் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சீதாலட்சுமி திருச்சி சமயபுரம் அரியலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 14 குற்ற வழக்குகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.