விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கீழ் பசார் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னன். இவரது மகன் கண்ணதாசன் (வயது 27). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அச்சரப்பாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும், இவர்களின் இரு குடும்பத்தினரும் முறைப்படி கலந்து பேசி திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்தனர். இதன் பிறகு இரு வீட்டாரும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை விறுவிறுப்பாக செய்து வந்தனர்.
இந்நிலையில் மாப்பிள்ளை கண்ணதாசன் திடீரென காணாமல் போனார். பிறகு அவர் நிச்சயம் செய்த மணப்பெண்ணுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வந்தேன் காதலித்த பெண்ணை தற்போது திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வாழ்கிறோம். இந்த விஷயத்தை உனது பெற்றோரிடம் எடுத்துக் கூறி விடு. மேலும் நீ வேறு யாரையாவது திருமணம் செய்து கொள் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு மணப்பெண் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இந்தத் தகவல் அறிந்த கண்ணதாசனின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். கண்ணதாசன் ஏற்கனவே தனது கம்பெனியில் வேலை செய்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். எனக்கு வேறு ஒரு பெண்ணுடன் பெற்றோர் நிச்சயதார்த்தம் செய்ததை அவர் நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்காமல் திடீரென்று காதலியை அழைத்துச் சென்று ஒரு வீட்டில் வைத்து தாலி கட்டி கணவன் மனைவியாக இருந்துள்ளனர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து திருமணம் தடைப்பட்டுப் போன வருத்தத்தில் இருந்த மணப்பெண்ணின் உறவினர்களான ஆவணிப்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜி, அவரது மனைவி சித்ரா ஆகியோர் திருமணத்தை ஏன் நிறுத்தினாய் என்று கண்ணதாசனிடம் கேட்டு தகராறு செய்துள்ளனர்.
இதனால் கண்ணதாசனுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கண்ணதாசனை தாக்கியுள்ளனர். இதில் கண்ணதாசனுக்கு நான்கு பற்கள் உடைந்துள்ளன. இதனால் அவமானம் அடைந்த கண்ணதாசன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷம் குடித்துள்ளார். விஷம் குடித்து தற்கொலை தகவல் அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணதாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஒலக்கூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணதாசன் தற்கொலைக்கு காரணம் என்று உதயா மற்றும் ராஜி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை தவிர்த்து விட்டு காதலியை கைப்பிடித்தவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.