தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி அருகே இருக்கும் கிராமம் பெருமாள் கோவில்பட்டி. இந்த ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், திருமலாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த இக்கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் பிற சமுதாயத்திற்கு தனி மயானமும் பட்டியலின மக்களுக்குத் தனி மயானமும் உள்ளது. பெருமாள்கோவில்பட்டியின் கிழக்குப்புறம் பட்டியலின மக்களுக்கு என தனியாக அமைக்கப்பட்டுள்ள மயானத்தில் ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தகன மேடை அமைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு செல்வதற்கு பாதை வசதி இல்லை. இதனால் பட்டியலின மக்கள் குடும்பங்களில் ஒவ்வொரு இறப்பு நேரும் போதும் உடலை தேர்கட்டி தூக்கி முழங்கால் முதல் இடுப்பளவு தண்ணீர் வரை உள்ள ஓடைப்பகுதி கழிவு நீரில் நடந்து பெரும் அவதிப்பட்டு மயானத்திற்கு சென்று வருகின்றனர்.
இது குறித்து கிராமம் உருவான கடந்த 50 ஆண்டுகளாக திருமலாபுரம் ஊராட்சி நிர்வாகம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தேனி மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றில் புகார் மனு அளித்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் நேற்று கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 102 வயது குருசாமி என்ற முதியவர் உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, மயானத்திற்கு பாதையில்லாததால் அவரது 8 பிள்ளைகளும், உறவினர்களும் ஒன்றாக சேர்ந்து இறந்தவர் உடலைத் தூக்கிக்கொண்டு ஓடை கழிவுநீரில் நடந்துசென்று பெரும் அவதிப்பட்டு மயானத்தில் அடக்கம் செய்திருக்கின்றனர்.
இந்நிலையில் உரிய நடவடிக்கை எடுத்து பெருமாள் கோவில்பட்டி பட்டியலின மக்களுக்கு மயானம் செல்ல பாதை அமைக்காவிட்டால் அடுத்த மரணம் ஏற்படும்போது பிணத்துடன் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனர்.