மதுரை ஆதீனத்தின் 292வது மடாதிபதி அருணகிரிநாதர் உயிரிழந்த நிலையில், 293 வது மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நியமிக்கப்பட்டார். இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், ''தேச பக்தராக இருந்த வ.உ.சி தன்னுடைய சொத்து எல்லாவற்றையும் இந்த நாட்டிற்காக தியாகம் செய்தார். அந்த தியாக மனப்பான்மை இன்றைய இளைஞர்களிடம் இல்லை. இளைஞர்கள் எதையோ இழந்ததை மாதிரி அலைகிறார்கள். அதற்குக் காரணம், ஒன்று அரசியல் மற்றொன்று சினிமா. இந்த இரண்டும் சேர்ந்து இளைஞர்களை குழப்பி உள்ளது. அதனுடைய விளைவு தேசபக்தி குறைந்து கொண்டு வருகிறது. அது மாற்றப்பட வேண்டும் என்பது என் கருத்து.
விநாயகர் சதுர்த்தி இன்றைக்கு நேற்று ஏற்பட்டது அன்று. வெள்ளையன் ஆண்டபொழுது, மக்கள் கூடக்கூடாது என்று நாட்டில் தடை விதித்திருந்தார்கள். அப்பொழுது திலகர்தான் விநாயகர் சதுர்த்தியை தொடக்கிவைத்தார். விநாயகர் சதுர்த்தி ஒரு சமயத்திற்கு உண்டான விழா அல்ல. இது ஒரு சமுதாய விழா. தேசபக்தி ஏற்படுத்திய விநாயகர் சதுர்த்தி. இந்த விழாவை அரசு நடத்த வேண்டும் என்பது எனது கருத்து. மது ஒழிப்பிற்காக மகாத்மா காந்தி போராடியிருக்கிறார். பையன் பாஸ் மார்க் எடுக்கிறார்களோ இல்லையோ டாஸ்மாக் கடைக்கு தான் போகிறான். இந்த மது ஒழிக்கப்பட வேண்டும். பெண்கள் ரோட்டில் நடமாட முடியவில்லை. நம் நாட்டினுடைய பண்பாடு கலாச்சாரம் அழிந்து கொண்டு வருகிறது. டாஸ்மாக்கை வைத்து தான் அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்ற தேவை இல்லை. அந்த கடைகளை எல்லாம் அடைக்க வேண்டும்'' என்றார்.