
கடந்த 1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், கடைசியாக 1999ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பிறகு, நீண்ட காலமாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதன் காரணமாக, தேர்தல் நடத்த வேண்டும் என்று மறைந்த எம்.யூ.ஜே மோகன் உள்ளிட்ட சிலர் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் கண்காணிப்பில் தேர்தல் நடத்த உத்தரவிட்டது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு, பதிவுத்துறை சட்டத்தின்படி சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தலின் வாக்குப் பதிவு கடந்த 15ஆம் தேதி நடந்தது. இதில் திக்கான கூட்டணி மற்றும் ஒற்றுமை கூட்டணி போட்டியிட்டது. மொத்தம் 1,502 வாக்குகளில் 1,371 வாக்குகள் பதிவானது. இதில் நீதிக்கான கூட்டணி அபார வெற்றி பெற்றது. சுரேஷ் வேதநாயகம் தலைவராகவும், அசிப் பொதுச் செயலாளராகவும், மணிகண்டன் பொருளாளராகவும் வெற்றி பெற்றனர். அதே போல், இணைச் செயலாளராக நெல்சன் சேவியர் துணை தலைவர்களாக மதன், சுந்தர பாரதி ஆகியோர், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக ஸ்டாலின், விஜய கோபால், பழனி ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த நிலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் தனது கட்சியின் எக்ஸ் பக்கத்தின் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு (Chennai Press Club) 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஜனநாயகத்தின் நான்காவது தூணாகிய பத்திரிகையாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, என்றும் நடுநிலையுடன் ஊடக அறத்தைப் போற்றி, புதிய நிர்வாகக் குழு வெற்றிகரமாகச் செயல்பட வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.