






கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திமுக தலைமையிலான அரசு, கரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்திருந்தது. அதில், முதல் தவணையாக 2,000 ரூபாய் மே மாதத்திலேயே வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் தவணை 2,000 ரூபாய்க்கான டோக்கன், கடந்த 11.06.2021 தேதிமுதல் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டது.
14ஆம் தேதிவரை 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பைப் பெறுவதற்கான டோக்கனும் வழங்கப்பட்ட நிலையில், இன்றுமுதல் (ஜூன் 15) அரிசி அட்டைதாரர்கள் 2,000 ரூபாய் மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்புகளை டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில் சென்று ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் அரசு வழங்கும் கரோனா நிவாரண தொகை 2000 ரூபாய் மற்றும் 14 இலவசப் பொருட்களை வழங்கும் பணியை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பயனாளிகளுக்கு வழங்கி துவக்கிவைத்தார்.