
நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் திருச்சி மாவட்ட தலைவராகச் செயல்பட்டு வந்தவர் ஆர்.கே.ராஜா. திடீரென ராஜாவை பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கி மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜயின் ஆரம்ப காலத்தில் இருந்தும் ரசிகர் மன்றம் ஆரம்பம் முதலும் தற்போது விஜய் மக்கள் இயக்கம் வரை இருந்தவர் ஆர்.கே.ராஜா. திடீரென அவர் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டது விஜய் ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'தளபதியின் உறவுகள்' என்கிற தலைப்பில் திருச்சி மாவட்ட தலைவராகச் செயல்பட்டு வரும் ஆர்.கே.ராஜா விஜய் மக்கள் இயக்கத்தின் கண்ணியத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் களங்கம் ஏற்பட்டுத்தும் வகையில் நடந்து கொண்டு இருப்பதாலும் இயக்கக் கட்டுபாட்டை மீறி இயக்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாலும் மேலும் அனைவரின் ஒற்றுமையைச் சீர்குலைக்கின்ற வகையில் தவறான செய்திகளைப் பரப்புவதாலும் தளபதி அவர்களின் ஆணைப்படி திருச்சி மாவட்ட தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார் என்ற அறிவிப்பு கடிதம் தமிழகம் முழுவதும் உள்ள விஜய் இயக்க நிர்வாகிகளுக்கு அனுப்பட்டு உள்ளது.

இதுகுறித்து விசாரித்தபோது, நடிகர் விஜய் மக்கள் இயக்கத்திற்கு கௌரவ தலைவர் மற்றும் பொருளாளராகவும் இருப்பவர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன்.
ஆரம்பத்தில் நடிகர் விஜய் ரசிகர் மன்றத்திற்கு விஜய்ராமன் என்பவர் மாநில பொறுப்பில் இருந்தார். அதன் பிறகு ஜெயசீலன் ( இவர் நடிகர் விஷால் மன்றத்தின் பொறுப்பாளர்), பாஸ்கர் (பி.ஜே.பி. கட்சியில் இணைந்து விட்டார்) ஆகியோர் இருந்தனர். தற்போது புஸ்ஸி ஆனந்த் உள்ளார். இந்த புஸ்ஸி ஆனந்த் மாநில பொறுப்புக்கு வந்த காரணமே எஸ்.ஏ.சந்திரசேகர் தான்.
புஸ்ஸி ஆனந்த் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் பொறுப்புக்கு வந்தவுடன் எஸ்.ஏ.சந்திரசேகனின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. அவரிடம் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது, அவரின் புகைப்படம் போடக்கூடாது, விஜய் அப்பாவுக்கு நெருக்கமான மன்ற நிர்வாகிகளின் வீட்டு விசேஷங்களுக்கு செல்வதையே தவிர்த்து வந்தார். பிறகு எஸ்.ஏ.சந்திரசேகரனால் விஜய் மன்றத்தில் பொறுப்பு வழங்கப்பட்ட அனைவரும் ஏதேனும் ஒரு காரணம் சொல்லி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.

எஸ்.ஏ.சந்திரசேகரனுடன் எந்த மாவட்ட தலைவரும் தொடர்பில் இருப்பதை புஸ்ஸி ஆனந்த் விரும்பவில்லை. அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருகிறார்கள் என்கிறார்கள்.
இதில் உச்சக்கட்டம் என்னவென்றால் நடிகர் விஜய்யே ஒரு கட்டத்தில் என் அப்பாவின் படத்தை யாரும் போடாதீங்க என்று மன்ற நிர்வாகிகளிடம் சொல்லும் அளவிற்குச் சென்று விட்டதாம்.
'மாஸ்டர்' ஆடியோ வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய் தன் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனை கட்டிப்பிடித்தபோது மன்ற நிர்வாகிகள் பலரும் குழம்பி போனார்கள்.
எஸ்.ஏ.சந்திரசேகரனை அப்பா என்று உரிமையோடு அழைக்கும் முக்கிய நிர்வாகிகளில் திருச்சி ராஜாவும் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது.


சமீபத்தில் நடிகர் விஜயின் உதவியாளர் செல்வக்குமார், மாஸ்டர் இணை தயாரிப்பாளரும் விஜய் சமூகவலைத்தள பொறுப்பாளருமான ஜெகதீஷ் ஆகியோர் நீக்கப்பட்டது வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் சர்ச்சைகள் தொடர்ந்த நிலையில், திருச்சி ராஜா நீக்கம் செய்யப்பட்டது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜா நீக்கப்பட்டது பேரழிவு கரோனோ காலத்தில் நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
நீக்கம் குறித்து திருச்சி விஜய் ராஜாவிடம் பேசியபோது, கனவில் கூட விஜய் சாருக்கு துரோகம் நினைச்சது கிடையாது! இதுக்கு மேல எதுவும் பேச முடியாது என்று இணைப்பைத் துண்டித்தார்.