
பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றியது. இதுவரை, கவர்னர் நியமிக்கும் மூன்று பேர் கொண்ட குழுவின் பரிந்துரையின் பேரில் துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டுவந்த நிலையில், இந்த மசோதா அதனை மாற்ற வழிவகை செய்யும். இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை மாநில அரசு நியமனம் செய்யமுடியும். தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் துணை வேந்தர்களை நியமனம் செய்யும் உரிமை மாநில அரசுகளுக்கு உள்ள நிலையில் தற்போது தமிழக அரசும் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில் இந்த மசோதாவுக்கு பாஜக, அதிமுக எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது தேமுதிகவும் இதை எதிர்த்துள்ளது. இதுதொடர்பாக விஜயகாந்த் தெரிவித்துள்ளதாவது, " இந்தியா முழுவதும் பல்கலை வேந்தர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்களோ அந்த முறை தொடர்வதே சிறப்பான ஒன்று. அதில் மாற்றம் கொண்டுவர என்ன அவசியம் ஏற்பட்டது. அதையும் தாண்டி இதை மாற்றுவது என்பது எளிதான காரியம் அல்ல. ஏற்கனவே நீட் தேர்வில் மத்திய மாநில அரசுகளிடையே முரண்பாடுகள் உள்ளதால் மாணவர்கள், பெற்றோர்கள் இடையே குழப்பம் உள்ளது. இதைப் போன்று இந்த விவகாரத்திலும் குழப்பம் விளைவிக்க வேண்டாம் என்பதே எங்களின் நிலைப்பாடு. தமிழக அரசு அதனை உறுதிப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.