வேலூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா ராமநாயக்கன்பேட்டை காக்கன் வட்டம் பகுதியில் கடந்த நவம்பர் 13ந்தேதி இரவு விவசாயி நாகராஜன் என்பவரது நிலத்து வீட்டில் கட்டிவைக்கப்பட்டுயிருந்த ஒரு ஆடும், நவம்பர் 14ந்தேதி இரவு கமால்பாஷா என்பவரது 4 கோழிகளும் சிறுத்தை அடித்து தின்றதாக தெரிகிறது.
நவம்பர் 15ந்தேதி அதிகாலை குட்டூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் சிறுத்தையை நேரில் பார்த்துள்ளார். அவரை சிறுத்தை முறைக்க, கொஞ்சம் தைரியத்தை வர வைத்துக்கொண்டு தனது சைக்கிளை தூக்கி சிறுத்தையை நோக்கி வீசியதால் சிறுத்தை புதார் இருந்த பகுதிக்கு சென்று மறைந்துள்ளது.
அதேபோல் அதே பகுதியில் நிலம் வைத்துள்ள வழக்கறிஞர் பாலசுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் 50- க்கும் மேற்பட்ட சிறுத்தை கால் தடம் இருப்பதை பார்த்து, அவர் வருவாய்த்துறை, வனத்துறையினருக்கு தகவல் தந்துள்ளார். அதன்பின்பே அதிகாரிகள் வந்து ஆய்வு செய்துள்ளனர்.
கடந்த 3 நாட்களாக சிறுத்தை, இதே பகுதியில் நடமாடுவதாக கூறப்படுகிறது. பள்ளி மாணவ, மாணவியர்களும் பொதுமக்கள், ஆவாரம் குப்பம்- புத்துக்கோயில் இணைப்பு சாலைக்கு நாளொன்றுக்கு 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேர் பயணிப்பதாக கூறப்படுகிறது.
இந்த பகுதியில் சிறுத்தை நடமாடுவதால் சிறுத்தையை உடனடியாக பிடிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.