Skip to main content

நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள்; லஞ்ச ஒழிப்புத்துறையை அனுப்பிய நீதிமன்றம்!

Published on 14/02/2025 | Edited on 14/02/2025

 

court sent Anti-Corruption Department to investigate irregularities town panchayat

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதால் உரிய ஆய்வுகள் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதே ஊரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் துறை சார்ந்த அரசு அலுவலர்களிடம் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் பேரூராட்சிகள் துறை உரிய ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதுடன் தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவையடுத்து பேரூராட்சி இயக்குநர் அலுவலக அலுவலர்கள் பேராவூரணி பேரூராட்சியில் ஆய்வு செய்த போது ஒப்பந்தங்கள் போடப்பட்டு சாலை பணிகள் செய்யாமலேயே பணிகள் முடிவடைந்ததாக அப்போதை செயல் அலுவலர் பழனிவேல் உதவியுடன் பல லட்சங்களை திமுக பேரூராட்சி தலைவர் சாந்தியின் கணவரும் திமுக நகரச் செயலாளருமான சேகர், மற்றும் சாந்தியின் மாமனார் திமுக முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் எடுத்திருப்பதும், ஒப்பந்தம் எடுத்தவர் ஒருவர் பெயர் இருக்கும் போதும் பணத்தை செல்வராஜ் பெயருக்கு அனுப்பியுள்ளதும் தெரியவந்தது. மேலும் செல்வராஜ் வீட்டில் உள்ளவர்கள் பெயர்களுக்கு பணம் பரிமாற்றம் நடந்துள்ளது எனப் பல முறைகேடுகள் ஆய்வில் தெரிய வந்தது. ஆனால் ஆய்விற்கு பிறகும் நீதிமன்ற உத்தரவுப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தான் பேராவூரணி பொன்காடு நீலகண்டன் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என்று அதே நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தஞ்சை மாவட்ட லஞ்சஒழிப்பு போலீசார் முறையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில் வியாழக்கிழமை பேராவூரணி வந்த தஞ்சை லஞ்சஒழிப்பு துறை டிஎஸ்பி அன்பரசன் தலைமையிலான போலீசார், புகார்தாரரான பொன்காடு நீலகண்டனிடம் விசாரணை செய்து தொடர்ந்து பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்திலும் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் புகாரில் கூறப்பட்டுள்ள சாலைகள், பணிகள் நடந்துள்ளதா? என்பதையும் நேரில் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் நிலையில் முறைகேடு நடந்திருப்பது தெரியவரும் பட்சத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையே வழக்குப் பதிவு செய்து மேல் விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிடலாம் என்று கூறப்படுகிறது.

அப்படி நீதிமன்றம் உத்தரவிட்டால் இந்த முறைகேடுகளில் சம்மந்தப்பட்ட பேரூராட்சி அலுவலர்கள், மற்றும் ஒப்பந்தக்காரர், ஒப்பந்தமே எடுக்காமல் முறைகேடாக பணம் பெற்றவர்கள் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். இதனால் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

சார்ந்த செய்திகள்