




அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனி ஆண்டவர் கலை கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளிநாட்டைச் சேர்ந்த முருகபக்தர்களும் ஆதீனங்களும், இலங்கை ஆளுநர் அதோடு முக்கிய பிரமுகர்களும் பெருந்திரளாக கலந்துக் கொண்டனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட சுவிட்சர்லாந் நாட்டைச் சேர்ந்த வேலுப்பிள்ளையிடம் கேட்ட போது, ‘கடந்த 2014 ல் சுவிட்சர்லாந்தில் 2வது அனைத்துலக முருக பக்தர்கள் மாநாடு எனது தலைமையில் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அழைத்த அழைப்பிதழின் பேரில் சுவிட்சர்லாந்தில் இருந்து 15 பேர் இந்த மாநாட்டிற்கு வந்திருக்கிறோம். இந்த மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழுக்கும் முருகனுக்கும் நடக்கக்கூடிய விழாவாகும். அதில் கண்டிப்பாக தமிழனாக ஒவ்வொருவரும் கலந்து கொள்ள வேண்டும். ஏற்பாடுகள் மிகவும் அருமையாக இருக்கிறது. இது போன்ற மாநாடு இனி வரும் காலங்களில் நடக்கும் என்பதில் ஐயப்பாடாக உள்ளது. அப்படி ஒரு முருகன் மாநாட்டை முதல்வர் ஸ்டாலினும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கு கோடான கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று கூறினார்.
இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானிடம் கேட்ட போது, ‘தமிழக அரசால் ஏற்பாடு செய்திருந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முருக பக்தர்களுக்கு மட்டுமல்ல, இருக்கிற அனைத்து இந்து சமயத்தினருக்கு அடையாளமாக இந்த மாநாடு இப்புனித பூமியில் நடந்து கொண்டு இருக்கிறது. முருகன் பக்தர்கள் ஒன்று கூடும் இடமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த முயற்சியை முன்னெடுத்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறினார்.
அதை தொடர்ந்து மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளான தருமபுர ஆதீனத்திடம் கேட்ட போது, ‘உலகில் யாரும் செய்யாத ஒரு நிகழ்வை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சீரோடும் சிறப்போடும் செய்திருக்கிறார். உலக பக்தர்களை எல்லாம் ஒன்றிணைத்த நிகழ்வு சிறப்புக்குறியது. முருகு என்ற சொல்லு தமிழ் என்பதால் வல்லினம் மெல்லினம் இடையினம் என்ற மூன்று சொல்லால் காக்கப்படுகிறது. சங்க இலக்கியங்களிலும் பிற்கால இலக்கியங்களிலும் முருகனைப் பற்றி பாடாத புலவர்களே இல்லை. அது மட்டுமல்ல ஆறுபடை வீடுகளுக்கும் இலவசமாக பக்தர்களை அழைத்துச் சென்றது இதற்கு முந்தைய அரசும் செய்ததில்லை, இனிவரும் அரசும் செய்வார்களா என்று தெரியவில்லை. அதேபோல் சக்தி தலங்களுக்கு பேருந்து மூலமாக அழைத்து சென்றிருக்கிறார்கள். இது போன்ற பல காரியங்களில் எல்லாம் செய்து வரும் ஆன்மீக அரசாக இந்த அரசு செய்து வருவது பாராட்டுக்குரியது’ என்று கூறினார். இப்படி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு வந்த வெளிநாட்டினவரும் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் இருந்து வந்த முக்கிய பிரமுகர்களும் தமிழக அரசு நடத்திய இந்த மாநாட்டை பெருமையுடன் பார்த்தும் பாராட்டியும் வருகிறார்கள்.