வேலூர் மாவட்டம் காட்பாடியில் புதிதாகப் பிரியாணி கடை திறப்பு விழாவில், ஒரு மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் என்ற விளம்பரத்தால் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து முட்டி மோதி பிரியாணி வாங்கிச் செல்லும் அவல நிலையை அவ்வழியாக வந்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பார்த்து கோபமடைந்து பிரியாணி கடை உரிமையாளரை அழைத்துள்ளார்.
பின்பு அவரிடம், “பொதுமக்கள் காசு கொடுத்து தான் பிரியாணி வாங்குகிறார்கள். நீங்க என்ன பிச்சையா போடுறீங்க... காசு கொடுத்து பிரியாணி வாங்கும் பொது மக்களுக்கு போதிய வசதிகளை செய்து கொடுக்காமல் வெயிலில் காத்திருந்து பிரியாணி வாங்க வைக்கிறீர்களே” எனக் கோபம் அடைந்து அங்கிருந்த காவலர்களை அழைத்து அனுமதி வாங்காமல் கடை திறக்கிறீர்களே உடனடியாக அந்த கடையை இழுத்து பூட்டுங்க எனக் கோபத்துடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
உடனே மாநகராட்சி ஊழியர்கள் காவல்துறையினர் அங்கிருந்த பொதுமக்களை அனுப்பிவிட்டு கடையை மூடிவிட்டுச் சென்றனர். இதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பிரியாணி வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.