வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியம் சஞ்சீவனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நெடுநிலைப்பள்ளி உள்ளது. இதில் சுமார் 150 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. அதாவது 8 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 4 ஆசிரியர்கள் மட்டும் உள்ளனர்.
இதனால் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கல்வியில் மிகவும் பின்தங்கி நிலையில் உள்ளனர். இவர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சிபெற்று மற்ற பள்ளிகளில் சேர்வதற்கு சென்றால் கல்வி திறன் சரி இல்லை என்று கூறி அனுமதி மறுக்கின்றனர். இதனால் கிராம மக்கள் பலமுறை உரிய அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பள்ளியில் தொடர்ந்து குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இது தொடர்பாக பல முறை சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் ஜீன் 18 ந்தேதி காலை வகுப்புகளை புறக்கணித்து பெற்றோர்கள் மற்றும் கிராம மக்களுடன் பள்ளி முன்பாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து நாட்றம்பள்ளி போலீசார், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பதற்க்கும், குடிநீர் பற்றாக்குறை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிட்டு களைந்து சென்றனர். இதனால் அப்பகுதி சுமார் ஒருமணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.