காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அத்திவரதரை விஐபி வரிசையில் சென்று முக்கியஸ்தவர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அத்திவரதரை விஐபி வரிசையில் சென்று பிரபல ரவுடியான வரிச்சூர் செல்வம் தனது நண்பர்களுடன் தரிசனம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 16.07.2019 செவ்வாய் அன்று வரிச்சூர் செல்வம் தனது நண்பர்களுடன் முக்கிய நபர்கள் அத்திவரதரை தரிசிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த வரிசையில் சென்று தரிசனம் செய்தார். அத்திவரதருக்கு அருகாமையில் அமரவைக்கப்பட்டார்.
ரவுடியான வரிச்சூர் செல்வம் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. தற்போது குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை, திருந்தி வாழ்வதாக கூறினாலும், ரவுடி ஒருவர் முக்கிய நபர்கள் செல்லும் வரிசையில் சென்று அத்திவரதரை தரிசனம் செய்ததும், குடியரசுத் தலைவர் வந்தபோது இந்து அறநிலையத்துறை சார்பாக மரியாதை வழங்கப்பட்ட அதே இடத்தில் வரிச்சூர் செல்வம் அமர்ந்து தரிசனம் செய்ததும் பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
வரிச்சூர் செல்வம் அத்திவரதரை தரிசனம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவி விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இதையடுத்து வரிச்சூர் செல்வத்துக்கு ‘வி.ஐ.பி’ பாஸ் கிடைத்தது எப்படி? யார் பெயரில் வாங்கப்பட்டது. அது போலியானதா? உண்மையானதா? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.