செல்வாக்கான உயர் குடும்பங்களில் பெண்கள் அரசியலுக்கு வருவது ஒட்டுமொத்த பெண்களின் பிரதிநிதித்துவமாகக் கருத முடியாது என காங்கிரல் பொதுச் செயலாளராக பிரியங்கா நியமனம் குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க துணைத் தலைவர் உ.வாசுகி கூறினார். புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களிடையே பேசுகையில்,
ஆசிரியர், அரசு ஊழியர்களின் போராட்டத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பது தவறான கருத்து. உண்மையில் இது அரசாங்கமே ஏற்படுத்திய பாதிப்பு. நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கவில்லை. அரசாணை எண்: 56, 100, 101 என்பது எதிர்காலத்தில் நிரந்தரமான அரசுப் பணியே இல்லாமல் நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கையாகும். இது எல்லாத்துறைகளிலும் அவுட்சோர்சிங்க் முறையைக் கொண்டுவருவதற்கு வழிவகுக்கும். இதை ரத்து செய்ய வேண்டும் என்பது தவறா? அவர்களின் 21 மாத சம்பளத்தை கொடுக்காமல் பிடித்து வைத்திருப்பது நியாயமா? ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை அரசு உடனடியாக அழைத்துப்பேசி சுமூகத் தீர்வுகாண வேண்டும்.
மத்திய அரசின் பினாமியாக செயல்படும் எடப்பாடி அரசு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கருத்துரிமையை முடக்கி வருகிறது. தனது ஊழல் சாம்ராஜ்சியத்தைப் பாதுகாக்கவும், மோடியின் பினாமி ஆட்சியாக செயல்படுவதற்கும் மட்டுமே இவர்களுக்கு நேரம் இருக்கிறது. கொடநாடு கொலைகள் தொடர் மர்மமாக நீடிக்கிறது.
சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாட்டிற்கு பெண்கள் மத்தியில் ஆதரவு இல்லையென்றால் வனிதா மதில் சுவருக்கு 50 லட்சம் பெண்கள் திரண்டு இருப்பார்களா? கேரள மாநிலத்தின் பாஜக தலைவரே தவறு செய்துவிட்டோம் என பின்வாங்கி இருப்பாரா? எங்கள் அமைப்பு நினைத்திருந்தால் பல லட்சம் பேரை சபரிமலைக்கு அனுப்பி இருக்க முடியும். அது எங்கள் நோக்கமல்ல. உண்மையில் வழிபாடு நடத்த விரும்பும் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.
பெரும்பாலான மாநிலங்களில் தேர்தலை நிர்ணயிக்கக் கூடியவைகளாக மாநிலக் கட்சிகளே உள்ளன. எனவே, ஒட்டுமொத்தமாக தேசிய அளவில் அணிச் சேர்க்கைக்கு சாத்தியமில்லை. மாநிலத்துக்கு மாநிலம் நிலைமை மாறும். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற தொகுதிகளில் பாதிக்கும் குறைவான தொகுதிகள்தான் கிடைக்கும் என்பதுதான் அந்த மாநிலத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும் உண்மை.
உத்தரதப்பிரதேசத்தில் பாஜக ஒற்றை இலக்கத்தை தாண்ட முடியாது என்பதுதான் யதார்த்தம். மோடிக்குப் பதிலாக இன்னொரு பிரதமர் வேட்பாளர் வேண்டும் என்று அந்தக் கட்சிக்குள்ளே கருத்து வந்திருப்பதிலிந்தே அவர்களின் தோல்விப் பயம் தெரிகிறது. பிஜேபியை தோற்கடிப்பதற்கான அனைத்து உத்திகளையும் நாங்கள் வகுப்போம். பிரதமர் யார் என்பதை தேர்தலுக்குப் பிறகே முடிவெடுக்கப்படும்.
முதலீட்டாளர்கள் மாநாடு வெறும் வாய்ஜாலங்களோடு முடிந்துள்ளது. இத்தனை லட்சம் கோடி முதலீடு வரும் என்பது கடந்த முதலீட்டார்கள் மாநாட்டிலும் வாய்ப்பந்தல் போட்டார்கள். அதன் மூலம் தற்பொழுது எத்தனை பேருக்கு வேலை கிடைத்து இருக்கிறது என்பதை அவர்களால் புள்ளிவிபரம் காட்ட முடியுமா?
செல்வாக்குமிக்க உயர் குடும்பத்திலிருந்து பெண்கள் வருவதை ஒட்டுமொத்தப் பெண்களின் பிரதிநிதியாக கருத முடியாது. பிரியங்கா காந்தி அரசியலுக்கு வந்திருப்பது அந்தக் குடும்பத்தின் செல்வாக்கில் இருந்து வந்ததாகவே கருத முடியும். உண்மையில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அடித்தட்டிலிருந்து வர வேண்டும். நாடாளுமன்ற சட்ட மன்றங்களில் எத்தனை பெண் பிரதிநிதிகளை அனுப்பி இருக்கிறோம். 31 சதவிகித இட ஒதுக்கீடு அமுல்படுத்து உள்ளிட்ட மாற்றங்களால் மட்டுமே பெண்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட மக்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்தப் பகுதியில் நூறுநாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாகவும், சம்பளத்தை ரூ.400-ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். சுழற்சி முறையில் அல்லாமல் அனைத்து நாட்களிலும் வேலை வழங்க வேண்டும். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பயனற்றுக்கிடக்கும் நீர்நிலைப் புறம்போக்குகளை வகைமாற்றம் செய்து ஏழைகளுக்கு பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு உ.வாசுகி தனது பேட்டியில்ல குறிப்பிட்டார். பேட்டியின் பொது விதொச மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், விச மாநில துணைச் செயலாhள் எஸ்.பொன்னுச்சாமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, விதொச மாவட்டத் தலைவர் ஏ.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.