
தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் இசக்கிராஜாவின் பிறந்தநாள் விழா தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல தென் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் தூத்துக்குடிக்கு வருகை தந்து கலந்து கொண்டனர்.

பின்னர் நிகழ்ச்சி முடிந்து அனைவரும் திரும்பி செல்லும் போது தூத்துக்குடி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ள வாகைகுளம் டோல்கேட்டில் அவர்கள் சென்ற கார்களை டோல்கேட் பணியாளர்கள் நிறுத்தி டோல்கேட் கட்டணம் கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியுள்ளது. இதையடுத்து கார்களில் வந்த 50-க்கும் மேற்பட்டோர் கும்பலாக சேர்ந்து டோல்கேட் ஊழியர்களை சரமாரியாக தாக்கி டோல்கேட்டை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர். டோல்கேட் பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் தாக்கியதில் தூத்துக்குடி சோரீஸ் புரத்தை சேர்ந்த பாபு, திருநெல்வேலியைச் சேர்ந்த ஆகாஷ் ஆகிய இரண்டு ஊழியர்கள் மண்டை உடைந்து ரத்த காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்நிலையில் டோல்கேட் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி