மதிமுக தொண்டர்களால் "நாடாளுமன்ற புலி" என்று அழைக்கப்படுகின்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அரசியல் வாழ்க்கையில் இன்று மிக முக்கியமான நாள். ஆம், தேசதுரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 18ம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களைவை தேர்தலில் போட்டியிட அவர் நாளை மனுத்தாக்கல் செய்ய இருந்த நிலையில், வைகோவிற்கு இன்று தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டு முதல் முறையாக திமுக உறுப்பினராக நாடாளுமன்றம் சென்ற வைகோ தொடர்ச்சியாக 84 மற்றும் 91 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் வென்று மாநிலங்களவைக்கு சென்றார்.
93 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்ட பிறகு அவர் மாநிலங்களவைக்கு கடந்த 23 ஆண்டுகளாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதற்கிடையில், 1998 மற்றும் 1999 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அவர் மக்களவைக்கு சென்றார். கிட்டதட்ட 15 ஆண்டுகளாக அவர் நாடாளுமன்றம் செல்ல முடியாத நிலையில், வரும் 18 தேதி நடைபெறும் தேர்தல் வழியாக அவர் மாநிலங்களவைக்கு செல்ல ஆயத்தமான நிலையில், தேச துரோக வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேல் முறையீடு செய்வதற்காக ஒரு மாதம் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தீர்ப்பு அவர் போட்டியிடுவதற்கு தடையாக இருக்குமா என்றால், இருக்காது என்கிறார்கள் அவரின் வழக்கறிஞர்கள்.
"மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் மட்டுமே அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் வைகோவிற்கு தேச துரோக சட்டத்தின் படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8(1) அதாவது தகுதி நீக்க சட்டத்தில் இணைக்கப்படவில்லை. அதையும் தாண்டி அவருக்கும் ஒரு ஆண்டு மட்டுமே தண்டனை வழக்கப்பட்டுள்ளதால் அவர் தேர்தலில் போட்டியிட தடையில்லை" என்கிறார்கள் அவர்கள். குஜராத் மாநிலத்தில் காலியாக இருக்கும் 2 மாநிலங்களவை இடங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் காங்கிரஸ் ஒரு இடத்தில் வெற்றிபெற வாய்ப்புள்ளதால், வெவ்வேறு தேதிகளில் தேர்தல் நடத்தும் தேர்தல் ஆணையம், வைகோ விவகாரத்தில் எதை செய்யவும் வாய்ப்பிருப்பதாக ஒருசாரார் கூறுவதையும் மறுப்பதற்கில்லை.