கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் அரசின் தொகுப்பு வீடு கட்டும் திட்டத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வீடு கட்டும் பணியைச் செய்து வருகிறார். இந்த நிலையில் வீடு கட்டுவதற்கான கம்பி, சிமெண்ட் போன்றவை ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பயனாளிகளுக்கு தரப்படுவது உண்டு.
அதன்படி கூலித் தொழிலாளியான விஜயகுமார், வீடு கட்டும் பணிக்காக திருநாவலூர் ஒன்றிய அலுவலகத்திற்குச் சென்று அங்கு மேற்பார்வையாளராக உள்ள சந்திராவிடம் தன் வீட்டுக்கு ஒதுக்கப்பட்ட கம்பியைக் கேட்டுள்ளார். அதற்கு சந்திரா, விஜயகுமாரிடம் 700 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் வீடு கட்ட கம்பி தருவேன் என்று கராராகக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த விஜயகுமார், இது குறித்து கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்படி நேற்று திருநாவலூர் ஒன்றிய அலுவலகத்திற்குச் சென்ற விஜயகுமார், மேற்பார்வையாளர் சந்திராவிடம் லஞ்சப் பணம் 700 ரூபாய் கொடுத்துள்ளார். பின்பு அங்கு தயாராக மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான போலீசார் பணம் வாங்கிய மேற்பார்வையாளர் சந்திராவை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். அவரை ஒன்றிய அலுவலகத்தில் வைத்து மாலை வரை விசாரணை செய்துள்ளனர்.