
திருச்சி பாரதியார் 7 வதுகிராசை சேர்ந்தவர் ராஜாராமன். இவர் கால்நடை டாக்டர். உடல்நிலை சரியில்லாததால் கடந்த 14.05.2004ல் மனைவி கல்யாணியை அழைத்துக்கொண்டு சென்னைக்கு சென்றார். அப்போது அவரது வீட்டில் 10 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனை குற்றப்பிரிவு போலிசார் வழக்கு பதிந்து விசாரணை செய்ததில் திருப்பூர் மாவட்டம் பழவஞ்சிபாளையத்தை சேர்ந்த விஜயனை கைது செய்து சிறையில் அடைத்து 10 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
இந்த திருட்டு சம்மந்தமான வழக்கு திருச்சி ஜெ.எம். - 4 நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சிறையில் அடைக்கப்பட்ட விஜயன் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் அதன் பிறகு நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆகாமல் தலைமறைவானார். கடந்த 14 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாகவே இருந்தார். விஜயன் இருக்கும் இடத்தையும் போலிசாரால் கண்டுபிடிக்க முடியாமல் திணறினார்கள். இதற்கு இடையில் நீதிமன்றத்தில் கடந்த 2017 ம் ஆண்டு விஜயனுக்கு பிடிவாரண்டு பிறபித்து உத்தரவிட்டார் நீதிபதி.
இதனால் நெருக்கடி அதிகமான திருச்சி காவல்துறை தலைமறைவான விஜயனை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் விசாரணையில் திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் அருகே பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.