திருச்சி மாவட்டம் மணப்பாறையில் திமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் பங்கேற்ற இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கட்சி தொண்டர்களை, கட்சிக்காக உழைத்தவர்களை அறிஞர் அண்ணாவாகவும், பெரியார் உருவிலும் பார்க்கிறேன் எனக்கூறினார்.
மணப்பாறையில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 ஆண்டுகால தலைவர் பதவியை நிறைவு செய்தது, 40 ஆண்டுகளாக மணப்பாறையின் கனவான அரசு கலை அறிவியல் கல்லூரி அமைத்து வாக்குறுதி நிறைவேற்றம், 400 திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா, மணப்பாறையில் கட்சியின் நகர, ஒன்றிய அலுவலகங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் அகில இந்திய அளவிலான கபடி போட்டி என ஐம்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை தியாகேசர் ஆலை மேல்நிலைப் பள்ளி வளாக உடற்கல்வி ஆசிரியர் எல்.வீரப்பன் நினைவு திடலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, அன்பில்.மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கபடி போட்டியின் இறுதியாட்டத்தை துவக்கி வைத்தனர். அதனைத்தொடர்ந்து திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின் அரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த அன்பில் பொய்யாமொழி திருவுருவ படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார். அதனைத்தொடர்ந்து அமைச்சர்களும் மரியாதை செலுத்துகின்றனர். பின் மணப்பாறை திமுக நகர, ஒன்றிய கட்சி அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டின் கல்வெட்டை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல்சமது பேசுகையில், உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் என்றும், மணப்பாறைக்கு அரசு கல்லூரி அமைய உதவியாக இருந்த உதயநிதி மற்றும் அமைச்சர்களுக்கு நன்றியும் தெரிவித்தார். மணப்பாறை குடிநீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக மாயனூர் கதவணை உபரி நீரை மணப்பாறை பொண்ணனியாறு அணைக்குகொண்டு வர ஆயத்தம் செய்யவும் கோரிக்கை வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திமுக என்பது தலைமுறை தலைமுறையாக மக்களுக்காக உழைக்கும் கட்சி, திமுக மூன்றாம் தலைமுறையாக தலைவராக வரவுள்ளவர் உதயநிதி ஸ்டாலின். அவர் இந்த கட்சியை (திமுக) மேலும் வளர்த்தெடுப்பார் என்று கூறினார்.
அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், "கடந்த (அதிமுக) ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட கடன் சுமையையும் ஏற்றுக்கொண்டு, மிகுந்த பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் தமிழக முதல்வர் தனது வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். தளபதி கட்டளையிட்டாலும், அவரது கொள்கையில் வழி நடக்கும் திமுக இளைஞரணி செயலாளர் உத்தரவிட்டாலும் அதை தலை மேல் ஏற்று நடைமுறைப்படுத்த காத்திருக்கிறோம்" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்.மகேஷ் பொய்யாமொழி, "அரசு கலை கல்லூரி தேவை என்ற மணப்பாறை மக்களின் 40 ஆண்டு கால கனவை திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற ஓராண்டு காலத்தில் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது" என்று கூறினர். விழா மேடையில் உதயநிதி ஸ்டாலினிக்கு கல்வித்துறை அமைச்சர் போர் வாலை பரிசாக வழங்கினார்.
விழா பேரூரையாற்றிய சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர், "உதயநிதி ஸ்டாலின், திமுகவிற்காக பாடுபட்ட மூத்த முன்னோடிகள் பொற்கிழி பெறுவதற்காக வந்திருக்கிறார்கள். அவர்கள் வாயிலாக பேரறிஞர் அண்ணாவையும் தந்தை பெரியாரையும் நான் பார்க்கிறேன்" எனக் கூறினார். நடந்து முடிந்த சட்டப்பேரவை மன்றம், பாராளுமன்றம், உள்ளாட்சி தேர்தல்களில் திமுகவிற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. தலைவர் ஸ்டாலின் தொட்டதெல்லாம் வெற்றி. இத்தகைய வெற்றியை பெற்றுக் கொடுத்த மணப்பாறை பகுதிக்கு அரசு கல்லூரி கொண்டு வந்தது போல, விரைவில் இப்பகுதியில் உள் விளையாட்டு அரங்கம் அமைத்துக் கொடுக்கப்படும் எனக் கூறினார்.
திமுக ஒன்றிய செயலாளர் சி.ராமசாமி ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், எம்.பி செ.ஜோதிமணி, திமுக எம்.எல்.ஏக்கள் ப.அப்துல்சமது, எம்.பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், காடுவெட்டி தியாகராஜன், திருச்சி மேயர் அன்பழகன், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.