ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்ட சேலம் மாநகர காவல்துறை, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மாநகரில் குறிப்பிட்ட இரு சாலைகள் வழியாக செல்ல தடை விதித்து, நூதன உத்தியை திங்கள் கிழமை (டிச. 16) முதல் அமல்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதேபோல், காரில் செல்லும்போது ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணிவதும் கட்டாயம் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் செல்வோர் மீது வழக்குப்பதிவு செய்வது, அபராதம் விதிப்பது என காவல்துறையினர் கெடுபிடி காட்டினர்.
சேலம் மாநகரில், சுந்தர் லாட்ஜ், நெத்திமேடு, அன்னதானப்பட்டி, சீலநாய்க்கன்பட்டி, வள்ளுவர் சிலை, ஆட்சியர் அலுவலக சாலை, அஸ்தம்பட்டி உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் தீவிர வாகனத்தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்ற அடிப்படை விதியை உணர வைக்கவே காவல்துறை ஒருபுறம் தடுமாறிக் கொண்டிருந்தாலும், அபராத வசூலிலும் தீவிர கவனம் செலுத்தியது.
இதனால் பல இடங்களில் வாகன ஓட்டிகளுக்கும், காவல்துறையினருக்கும், வாக்குவாதங்களும், சலசலப்புகளும் மூண்டன. காவல்துறை நடவடிக்கைக்கு வாகன ஓட்டிகளிடையே கடும் எதிர்ப்பும், ஆதரவும் கலந்தே உள்ளது. இந்நிலையில், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நூதன முறையில் ஒரு திட்டத்தை சேலம் மாநகர காவல்துறை திங்கள்கிழமை (டிச. 16) முதல் செயல்படுத்தத் தொடங்கி உள்ளது.
அதன்படி, அன்னதானப்பட்டியில் உள்ள மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் முதல் பிரபாத் திரையரங்கம் வரையிலான சாலை மற்றும் சுந்தர் லாட்ஜ் பேருந்து நிறுத்தம் முதல் மறவனேரி சாலை- செரி சாலை ஆகிய இரு சாலைகளிலும், ஹெல்மெட் அணிந்து வந்தால் மட்டுமே வாகன ஓட்டிகள் செல்ல அனுமதி உண்டு; ஹெல்மெட் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகள் இவ்விரு சாலைகளிலும் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதோடு, அவர்கள் வேறு பாதையில் திருப்பி விடப்படுவார்கள். ஹெல்மெட் இல்லாமல் இந்த சாலை வழியாக வரும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதிக்கப்படாது; வழக்கும் பதிவு செய்யப்படாது.
காவல்துறையினரின் இந்த நூதன நடவடிக்கையால் இன்று பல வாகன ஓட்டிகள், காவல்துறையின் அறிவிப்பையும் மீறி குறிப்பிட்ட சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் வந்தனர். அவர்களை வழியிலேயே தடுத்தி நிறுத்திய காவல்துறையினர், மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். இதனால் ஞாபக மறதியாக குறிப்பிட்ட சாலையில் வந்த பலர், கொஞ்சம் அவதிக்குள்ளாகினர். என்றாலும், காவல்துறையினரின் இந்த நூதன உத்தி, பெரிய அளவில் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது.