Skip to main content

ரஜினி சொன்ன இரண்டு காரணங்கள்... ஒன்றை மட்டும் ஏற்றுக்கொண்ட ஆணையம்

Published on 26/02/2020 | Edited on 26/02/2020

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான 19 வது கட்ட விசாரணை நேற்று தொடங்கி வருகிற 28ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆஜராகி விளக்கம் அளிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த், வழக்கறிஞர் ஹென்றி திபேன் உள்பட 31 பேருக்கு ஒரு நபர் ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது.

 

 Two reasons Rajini said... Commission accepted only one !!


இதில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜர் ஆவதற்கு விலக்குகோரி தனது வழக்கறிஞர் மூலமாக ஒரு நபர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் பேரில் ரஜினிகாந்த் தரப்பில் வழக்கறிஞர் இளம்பாரதி நேற்று ஒரு நபர் ஆணையத்தின் நேரில் ஆஜராகி மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவினை பரிசீலித்த நீதிபதி அருணா ஜெகதீசன் நடிகர் ரஜினிகாந்திற்கு நேற்று மட்டும் நேரில் ஆஜராக விலக்கு அளித்து பதில் மனு தாக்கல் செய்வதற்கு காலஅவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தார். இது தொடர்பாக ரஜினிகாந்த் தரப்பு வழக்கறிஞர் இளம்பாரதியும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருந்தார்.

 

 Two reasons Rajini said... Commission accepted only one !!


இந்த நிலையில் ஒரு நபர் ஆணைய கமிஷன் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அதில், நடிகர் ரஜினிகாந்த் நேற்று ஒரு நபர் கமிஷனில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அவர் நேரில் ஆஜராக விலக்கு கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் இரண்டு காரணங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒன்று தான் நேரில் வந்து ஆஜராவதனால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் என்றும், இரண்டாவதாக தொழில்முறை ரீதியாக வேலை இருப்பதால் நேரில் ஆஜராக முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் காரணத்தை ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டாவது காரணத்தின் அடிப்படையில் நடிகர் ரஜினிகாந்திற்கு நேற்று மட்டும் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டது. விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து முழுவதுமாக விலக்களிக்கப்பட்டதாக வந்த தகவல் தவறானது.

 

 Two reasons Rajini said... Commission accepted only one !!


மீண்டும் வேறொரு நாளில் அவர் நேரில் ஆஜராவதற்கு சம்மன் அனுப்பப்படும். இதற்கிடையில் விசாரணை தொடர்பான பதில் மனுவினை தாக்கல் செய்வதற்கு நடிகர் ரஜினிகாந்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படும் என்பது தொடர்பான விளக்கத்தினை எழுத்துப்பூர்வ ஆவண குறியீடாக தாக்கல் செய்ய மனு அளித்துள்ளோம்.  இது வழக்கமான நடைமுறைதான். அந்த மனுவில் அடுத்த கட்ட விசாரணைக்கு ஆஜராவதற்கான தேதி மீண்டும் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
 

 

 

சார்ந்த செய்திகள்