Skip to main content

“வன்னியர்கள் வழங்கிய பொது சொத்துக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது..” - அமைச்சர் சிவசங்கர்

Published on 29/12/2021 | Edited on 29/12/2021

 

Minister Sivasankar involved in inspection

 

1975ஆம் ஆண்டு வன்னியர் வளர்ச்சி கழகம் சார்பில் வழங்கிய பொது சொத்துக்கள் குறித்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி சிதம்பரம் நகரத்தில் பச்சையப்பன் பள்ளி எதிரே உள்ள வன்னியர்கள் வளர்ச்சி கழகத்தின் சொத்துக்களை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார். 

 

இதனை ஆய்வுசெய்த அவர் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புல துறையினரை கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்வதற்கு உத்திரவிட்டார்.  மேலும் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழக முதல்வரின் உத்தரவுக்கிணங்க தமிழகம் முழுவதும் வன்னியர்கள் வழங்கிய பொது சொத்துக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சில சொத்துக்கள் ஆக்கிரமிப்புகளும் பராமரிப்பு இல்லாமலும் உள்ளன. 

 

சிதம்பரத்தில் 1975-ஆம் ஆண்டு வன்னியர் வளர்ச்சி கழகம் சார்பில் இந்த இடத்தில் மாணவர்கள் தங்கும் விடுதி செயல்பட்டுள்ளது. இந்த இடத்தை வழங்கியவர்கள் தற்போது இல்லை. அதன் பிறகு 20 வருடம் கழித்து அங்கு கட்டிடம் கட்டி பராமரிப்பில்லாமல் உள்ளது. அதன் பணிகளும் பாதியிலேயே உள்ளன. எனவே இதனை பிற்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் வன்னியர் நல வாரிய பொது சொத்துக்கள் பராமரிப்பு அறக்கட்டளை மூலம் பராமரிப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிதம்பரம் பகுதியில் இதுபோன்ற சொத்துக்கள் இன்னும் உள்ளதா? என கணக்கெடுப்பு பணியும் நடக்க உள்ளது. மேலும் இந்த சொத்துக்களை பராமரித்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கலாமா என்பது குறித்த ஆய்வு குழு முடிவு செய்யும்” என்றார். 

 

இந்த ஆய்வின்போது அவருடன் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, வட்டாட்சியர் ஆனந்த், பிற்பட்டோர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் திமுக நகர செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட கட்சியினர் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மாணவர்களுக்குப் பாரம்பரிய விளையாட்டுப் பொருட்களை வழங்கிய அரசுப் பள்ளி

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Government school provided traditional sports equipment to students

சிதம்பரம் அருகே கொள்ளிடம் கரை ஓரத்தில் திட்டுக்காட்டூர் மற்றும் கீழகுண்டலபாடி கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்தக் கிராமம் கொள்ளிடக்கரை ஓரமாக உள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் இந்தக் கிராமம் மழை நீரால் சூழப்பட்டு பாதிக்கப்படுவது வழக்கமாக இருந்தது.  இதனைத் தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் இவர்களின் குடியிருப்புக்கு செல்லும் வகையில் அரசு ரூ20 கோடி செலவில் மேல்மட்ட பாலம் அமைத்துள்ளதால் நிம்மதி அடைந்துள்ளனர்.

இப்பகுதியில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகள் கீழகுண்டலபாடி கிராமத்தில் உள்ள பெ.ராசப்பா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இதில் மொத்தம் 81 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். தற்போது பள்ளி திறந்துள்ள நிலையில் உடல் நலத்தை பேணி காக்கும் வகையிலும் அறிவு திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் விளையாட்டுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வாடாமல்லி தலைமை தாங்கினார். பள்ளியின் செயலாளர் சிவராஜ் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக சீர்காழி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் யாமினி அழகு மலர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கேரம் போர்டு, பல்லாங்குழி, ஸ்கிப்பிங், பரமபதம், ரிங் பால், பில்டிங் வடிவமைப்பு, பிசினஸ் கார்டு, தாயம் உள்ளிட்ட விளையாட்டு பொருட்களை  மாணவர்களுக்கு வழங்கினார்.

மேலும் இந்தப் பள்ளிக்கு தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக பள்ளி கட்டிடத்திற்கு வண்ணம் தீட்டுதல், மாணவர்கள் அமர்வதற்கு பெஞ்ச், டேபிள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி, நூலக அறை,  கழிவறை புனரமைப்பு மாணவர்களுக்கு சீருடை மற்றும் உணவு அருந்துவதற்கு எவர் சில்வர் தட்டு உள்ளிட்ட பல்வேறு விதமான அடிப்படை உதவிகளை இவர் அவர்களின் நண்பர்கள் உதவியை பெற்று செய்து வருகிறார். இவரது சேவையை பாராட்டும் விதமாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியின் செயலாளர், பள்ளி ஆசிரியைகள்  சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியைகள் ஜெயசித்ரா, புஷ்பா, சங்கீதா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story

“பாஜகவுக்கு பாடம் புகட்டக்கூடிய வகையில் அமைந்தது தேர்தல் தீர்ப்பு” - திருமாவளவன் எம்.பி

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Election verdict is a lesson for BJP says Thirumavalavan MP

சிதம்பரம் அறுபத்துமூவர் நாயன்மார் மடத்தில் திமுக கூட்டணி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் வெற்றிக்கு பாடுபட்ட சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதி இந்தியா கூட்டணி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் வியாழக்கிழமை(13.6.2024) நடைபெற்றது. கூட்டத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினர் த.ஜேம்ஸ் விஜயராகவன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நன்றி தெரிவித்து பேசியது: தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறைகூவல் விடுத்தார். அதன்படி தமிழ்நாட்டு மக்கள் 40 தொகுதிகளிலும் வெற்றியை தந்துள்ளார்கள். வெற்றியைத் தந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவோம் என்று மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டது.

குறிப்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முயற்சியில் இது நடைபெற்றது. ஆனால் தமிழ்நாட்டில் நூறு விழுக்காடு வெற்றி பெற்ற நிலையில், அகில இந்திய அளவில் நாம் கனிசமான வெற்றியைப் பெற்றோம். மத்தியில் ஆட்சி அமைக்ககூடிய வகையில் வெற்றி பெறவில்லை என்றாலும் பாஜகவிற்கு பாடம் புகட்டக்கூடிய வகையில் தேர்தல் தீர்ப்பு அமைந்தது. கடந்த முறை பெற்ற வெற்றியை பெற முடியாமல் பாதிப்பை சந்தித்துள்ளனர். 63 இடங்களை இழந்துள்ளனர். இந்த 240 இடங்களில்தான் தனித்து வெற்றி பெற முடிந்தது. அகில இந்திய அளவில் பாஜகவை மக்கள் எதிர்த்து வாக்களித்துள்ளார்கள் என்பதுதான் உண்மை.

தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு மறைமுகமாக அறிவுரை சொல்லுவது போல் உள்ளது. நீங்கள் பக்குவம் பெற வேண்டும், ஒற்றுமை அடைய வேண்டும், வலிமைப் பெற வேண்டும். அதற்கு முன்னதாக உங்கள் கையில் ஆட்சியைக் கொடுத்தால், சரியாக இருக்காது எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்களை நீங்களே வலிமை படுத்தி கொள்ளுங்கள் என்ற அறிவுரை சொல்வது போல இந்தியா கூட்டணிக்கு வாக்களித்துள்ள இந்திய வாக்காள சமூகம். ஒரு புறம் பாஜகவிற்கு பாடம் புகட்டியுள்ளது. மற்றொரு புறம் இந்தியா கூட்டணியை வலிமை படுத்தி கொள்ளுங்கள் என வாய்ப்பு அளித்துள்ளது. 

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாமல் தமிழ்நாட்டில் 40க்கு 40ம் வெற்றி பெற்று மாபெரும் சாதனைப் படைத்துள்ளது. அதற்கு முழு பொறுப்பு முதல்வர் ஸ்டாலின்தான். 2019 முதல் தற்போதையுள்ள திமுக கூட்டணித் தொடர்ந்து நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல் என வெற்றி பெற்று வந்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி வலுவாகவும், புரிந்துணர்வோடும் உள்ளது. கொள்கை அடிப்படையில் உள்ளது. அதுதான் வெற்றிக்கு முக்கிய காரணமாகும். அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி தொகுதிகளில் மட்டும் 1 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெறுவோம் எனக் கூறினார். அந்த 1 லட்சம் வாக்குகள் வித்தாயாசத்தில் நான் வெற்றி பெற்றேன். அதற்குக் காரணம் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தின் செயல்திறன் மற்றும் உக்திதான் காரணம் என்றார் தொல்.திருமாவளவன்.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், “சிதம்பரம் தொகுதியில் 32 ஆயிரம் வாக்குகளும், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகளும், புவனகிரி தொகுதியில் 22 ஆயிரம் வாக்குகளும் பெற்றுள்ளோம். 1 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளோம். இன்னும் 2 ஆண்டுகளில் தேர்தல் வரவுள்ளது. எனவே திமுகவினர் தற்போதே பணியாற்ற தொடங்க வேண்டும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 40-க்கு 40 தொகுதிகள் வெற்றி பெற்ற கூட்டணி திமுக கூட்டணிதான்” என்றார்.

கூட்டத்தில் விசிக பொதுச்செயலாளர் ம.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ வாழ்த்துரையாற்றினார். மேலும் கூட்டத்தில் கடலூர் மாவட்ட திமுக பொருளாளர் எம்.ஆர்.கே.கதிரவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் அரங்க. தமிழ்ஒளி, முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் வ.க.செல்லப்பன், பால.அறவாழி, இந்திய கம்யூ கட்சி மாநிலக்குழு மணிவாசகம், நகர செயலாளர் தமிமுன் அன்சாரி, மதிமுக வழக்குரைஞர் கே.வி.மோகனசுந்தரம், நகர காங்கிரஸ் தலைவர் தில்லை ஆர்.மக்கீன், மாவட்ட துணைத் தலைவர் ராஜாசம்பத்குமார், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி நகர செயலாளர் ராஜா, நகரமன்ற துணைத் தலைவர் முத்துக்குமார், திமுக மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் அப்புசந்திரசேகரன், திமுக மாவட்ட பிரதிநிதிகள் ரா.வெங்கடேசன், விஎன்ஆர்.கிருஷ்ணமூர்த்தி, திமுக நகர துணை செயலாளர்கள் பா.பாலசுப்பிரமணியன், இளங்கோவன், நகரமன்ற உறுப்பினர்கள் ஏஆர்சி.மணிகண்டன், சி.க.ராஜன் மற்றும் திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.