கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதில் ஷிகெல்லா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதால் கேரளாவில் ஷவர்மாவிற்கு தடை விதிக்கப்பட்டது. அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அந்த பிரியாணியில் 'ஸ்டபைலோ காக்கஸ் ஆரவ்ஸ்' என்ற பாக்டீரியா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் அசைவ உணவு கடைகளில் உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இரண்டு பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரும் ஹோட்டல் மீது புகாரளித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை அடுத்த திருவேற்காடு பகுதியில் உள்ள எஸ்.எஸ்.பாண்டியன் ஹோட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டதாகவும் அதனால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை அடுத்து ஸ்ரீதர், பரத்குமார் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். எஸ்.எஸ்.பாண்டியன் ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்ககோரி இரண்டு பேரும் புகார் அளித்ததால் திருவேற்காடு போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.