Skip to main content

ஆபாச பேச்சு புகார்; அரசுப்பள்ளி பெண் ஆசிரியர்கள் இருவர் பணியிடைநீக்கம்!

Published on 12/12/2021 | Edited on 12/12/2021

 

Two female government school teachers sacked

 

சேலத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக அரசுப்பள்ளி பெண் ஆசிரியர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட உமையாள்புரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் வரலாறு பட்டதாரி ஆசிரியராக அங்குலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார்.

 

இவர், கடந்த சில நாள்களாக பள்ளியின் தலைமை ஆசிரியரை அவதூறாக பேசி வந்துள்ளார். அதேபோல், மாணவர்களிடமும், அவர்களின் பெற்றோர் குறித்து ஆபாச வார்த்தைகளால் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் மீது பலமுறை புகார்கள் சென்றதை அடுத்து, தலைமை ஆசிரியரும், சக ஆசிரியர்களும் அவரை எச்சரித்துள்ளார். அதையெல்லாம் பொருட்படுத்தாத அங்குலட்சுமி, தொடர்ந்து அவதூறாக பேசி வந்துள்ளார்.

 

ஒருகட்டத்தில், ஆத்திரம் அடைந்த மாணவர்களின் பெற்றோர்கள், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, ஆசிரியர் அங்குலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பள்ளியை முற்றுகையிட்டனர். இதையடுத்து அவர்களிடம் எழுத்து முலம் புகார்களைப் பெற்ற தலைமை ஆசிரியர், அவற்றை சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகனுக்கு அனுப்பி வைத்தார்.

 

அதேபோல், வாழப்பாடி அருகே உள்ள திருமனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் இயற்பியல் பாட முதுநிலை ஆசிரியராக மகேஸ்வரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவர்களுக்கு சரியாக பாடம் நடத்தாமல் இருந்ததுடன், அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்கள், பெற்றோர்களிடம் புகார் அளித்துள்ளனர்.

 

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பல பெற்றோர்கள், ஆசிரியர் மகேஸ்வரியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுள்ளனர். அப்போது,  அவர்களிடமும் திமிராக பேசியிருக்கிறார். மேலும், யாரிடம் புகார் சொன்னாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் தெனாவட்டாக பதில் சொல்லி இருக்கிறார்.

 

இதையடுத்து பெற்றோர்கள் பலரிடம் இருந்தும் மகேஸ்வரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு புகார்கள் சென்றன. இரண்டு ஆசிரியர்கள் மீதான புகார் மனுக்களின் மீதும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார்.

 

கல்வி அலுவலர்கள் நடத்திய விசாரணையில், பெற்றோர் அளித்த புகார்களில் மேற்படி பெண் ஆசிரியர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து பெண் ஆசிரியர்கள் அங்குலட்சுமி, மகேஸ்வரி ஆகிய இருவரையும் பணியிடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இந்த சம்பவம் சேலம் மாவட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்