Skip to main content

சொகுசு வீடுகளை கட்டி விற்பனை செய்ய முடிவு செய்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்!

Published on 02/08/2021 | Edited on 02/08/2021
Tamil Nadu Housing Board has decided to build and sell luxury houses

 

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் திருச்சி மன்னார்புரத்தில் 15 மாடிகளுடனும், வரகனேரியில் 14 மாடிகளுடனும் பிரம்மாண்ட குடியிருப்புகள் கட்டப்பட்டுவருகின்றன. இதன்படி மன்னார்புரத்தில் அரசு ஊழியர்களுக்கு வாடகை அடிப்படையில் வீடு வழங்கும் வகையில் 3.30 ஏக்கர் பரப்பளவில் ரூ. 103.5 கோடி செலவில் 464 வீடுகள் கட்டப்பட்டுவருகின்றன. 4 கட்டடங்களாக (ப்ளாக்) அமைக்கப்படும் இக்குடியிருப்பின் 2 கட்டடங்கள், 15 தளங்களுடனும், மீதமுள்ள 2 கட்டடங்கள் 14 தளங்களுடனும் கட்டப்படுகின்றன. இதிலுள்ள ‘ஏ’ வகை வீடுகள் 1,062 சதுர அடியிலும், ‘பி’ வகை வீடுகள் 969 சதுர அடியிலும், ‘சி’ வகை வீடுகள் 828 சதுர அடியிலும், ‘டி’ வகை வீடுகள் 678 சதுர அடி பரப்பளவிலும் கட்டப்படுகின்றன.

 

காந்தி மார்க்கெட்டிலிருந்து தஞ்சை செல்லும் சாலையில் வரகனேரி பகுதியில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய 14 மாடிகளுடன் கூடிய குடியிருப்பு கட்டப்பட்ட உள்ளது. 3 பிரிவுகளில் சுமார் ரூ. 96.75 கோடி செலவில் 192 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் முதற்கட்டமாக உயர் வருவாய் பிரிவினருக்கான வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. 14 மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்படும் இக்கட்டடத்தின் ஒவ்வொரு தளத்திலும் தலா 4 வீடுகள் கட்டப்படுகின்றன. இதன் விலை ரூ. 66.82 லட்சம் முதல் ரூ. 69.38 லட்சம் வரையிலும் நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளது. இதில் ஒவ்வொரு வீடும் 3 படுக்கை அறை, இதில் அறைகளுடன் இணைந்த 2 குளியல் அறை, ஒரு பொது குளியலறை, 2 பால்கனி, ஹால், சமையல் அறை உள்ளிட்டவற்றுடன் 1,517 முதல் 1,575 சதுரஅடி பரப்பளவில் கட்டப்படுகின்றன.

 

2 லிஃப்ட் மற்றும் 2 இடங்களில் படிக்கட்டு வசதிகள் செய்து தரப்படுகின்றன. நடுத்தர பிரிவினருக்கான சுமார் ரூ. 50 லட்சம் செலவில், 14 மாடிகளுடன் வீடுகள் கட்டப்படுகின்றன. ஒவ்வொரு தளத்திலும் தலா 6 வீடுகள், 1,137 சதுர அடி பரப்பளவில் கட்டப்படுகின்றன. அதேபோல குறைந்த வருவாய் பிரிவினருக்கான வீடுகள் ரூ. 33 லட்சத்தில் 13 மாடிகளுடன் கட்டடம் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு தளத்திலும் தலா 4 வீடுகள், 744 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்