
தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் இயங்கும் அனைத்துப் பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தெலுங்கு மொழியை கட்டாயப் பாடமாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான பள்ளி நிர்வாகத்துடன் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், வரும் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்சி, ஐசிஎஸ்இ மற்றும் பிற வாரியத்துடன் இணைக்கப்பட்ட பள்ளிகளில் உள்ள 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தெலுங்கு மொழியை அறிமுகப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, 2025-2026 கல்வியாண்டு முதல் அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தெலுங்கு மொழி கட்டாய பாடமாக மாநில அரசு அறிவித்துள்ளது.
9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிலையான தெலுங்குக்குப் பதிலாக எளிய தெலுங்கு பயன்படுத்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தெலுங்கு தாய்மொழி அல்லாத மாணவர்களுக்கும், பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் தெலுங்கு மொழியை கற்க எளிதாக்கும் வகையில் புத்தகம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
மும்மொழியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்று மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையை, தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. காலம் காலமாக இருமொழியை மட்டுமே பின்பற்றி உலகம் முழுவதும் முன்னேறி வரும் தமிழர்களுக்கு மூன்றாவது மொழி அவசியம் இல்லை என்று தமிழக அரசு தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தெலுங்கானா அரசு தெலுங்கு மொழியை கட்டாயப் பாடமாக அறிவித்துள்ளது.