அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று தனது சென்னை அடையாறு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், நடந்து முடிந்த பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும், மக்களின் தீர்ப்பை தலைவணங்கி வரவேற்கிறோம். அமமுகவின் செல்வாக்கு போகப்போக தெரியும். அமமுகவிற்கு சில பூத்களின் ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை. பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் பூஜ்ஜியம் என காட்டியுள்ளது. நாங்கள் கணக்கெடுத்ததன்படின் 300 வாக்குச்சாவடிகளில் எங்களுக்கு பூஜ்ஜியம் என காட்டுகிறது. எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? முகவர்கள் வாக்குகள் கூட பதிவாகாமல் போனது பற்றி தேர்தல் ஆணையம்தான் பதில் தர வேண்டும்.

திமுக வென்ற எம்.பி. தொகுதிகளின் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வென்றது எப்படி? என்றும் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி முடிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. எடப்பாடி ஆட்சி நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார்.
திமுகவுடன் அமமுக மறைமுக கூட்டணி வைத்துள்ளது என்று அதிமுகவின் குற்றச்சாட்டு குறித்து, திமுகவுடன் மறைமுக கூட்டணி என்றால் செந்தில்பாலாஜி ஏன் திமுகவுக்கு செல்கிறார் என்று பதில்கேள்வி எழுப்பினார்.
பிரிந்தவர்கள் மீண்டும் சேரவேண்டும் என்ற அதிமுகவின் அழைப்பு குறித்து, இணைய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அது அவரவர் விருப்பம் என்றார்.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் அமைப்பு செயலாளரும், தென் மண்டலப் பொறுப்பாளருமான ஆர்.பி.ஆதித்தன், அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தது குறித்து, செந்தில்பாலாஜி பிரிந்து சென்றார் என்றால் அது அவரின் புத்திசாலித்தனம். அமமுகவில் இருந்து விலக விரும்புபவர்கள் தாராளமாக விலகிக்கொள்ளலாம். உண்மை யானவர்கள்தான் எங்களுக்கு தேவை என்று தெரிவித்தார்.