Skip to main content

'44 ஆவது சிதம்பரம் நாட்டியாஞ்சலி'-தேதியை அறிவித்த அறக்கட்டளை நிர்வாகிகள் 

Published on 23/02/2025 | Edited on 23/02/2025

 

 Trust administrators announce date for '44th Chidambaram Natyaanjali'


சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 1981-ல் நாட்டியாஞ்சலி விழா தொடங்கப்பட்டு 2014 வரை 33 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி விழாவை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நடராஜர் கோயிலை பொது தீட்சிதர்கள் நிர்வகிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து 2015-ம் ஆண்டு பொதுதீட்சிதர்களே நாட்டியாஞ்சலியை நடத்துவதாக அறிவித்து கோயிலில் தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சார்பில் நாட்டியாஞ்சலியை நடத்தினர். இதனால் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் தெற்கு வீதியில் வி.எஸ் டிரஸ்ட் வளாகத்தில் நாட்டியாஞ்சலி விழா நடத்தி வந்தனர்.

நடராஜர் கோயிலில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் கோயில் பொது தீட்சிதர்கள் நடத்தி வந்த நாட்டியாஞ்சலி விழா 2022ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த ஆண்டு 44-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் வருகிற 26-ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று (பிப்.23) இதுகுறித்து நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலாளர் வழக்கறிஞர் ஏ,சம்பந்தம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ''நாட்டியாஞ்சலியில் நாடகம், கதக், கூச்சுப்புடி, மணிப்புரி நடனம் உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில் வடமாநிலங்களிலிருந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்து நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று நாட்டிய அஞ்சலி செலுத்துகின்றனர்.

இதில் 450 க்கு மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு இளம் கலைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளித்துள்ளோம். சிதம்பரத்தில் நாட்டிய அஞ்சலி விழா தொடங்கிய பிறகு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாட்டியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கோயில்களில் சிவராத்திரி அன்று நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாட்டியப் பள்ளியும் அதிக அளவில் அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள பாரத கலைகள் அனைத்தும் தமிழகத்திலிருந்து சென்றது தான்'' என்றார்.

நாட்டியாஞ்சலி  அறங்காவலர் குழுத் தலைவர் டாக்டர் ஆர்.முத்துக்குமரன், துணைத் தலைவர் சக்தி ஆர்.நடராஜன்,  பொருளாளர் எம்.கணபதி மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

சார்ந்த செய்திகள்