அகில இந்திய அளவில் தூய்மை நகரங்களுக்காக நடந்த போட்டியில் திருச்சி மாநகராட்சிக்கு 39-வது இடம் கிடைத்துள்ளது.
மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் சார்பில் அகில இந்திய அளவில் தூய்மை நகரங்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் திருச்சி மாநகராட்சி உள்பட இந்தியா முழுவதும் இருந்து 4 ஆயிரத்து 237 நகரங்கள் பங்கேற்றன. போட்டியில் பங்கேற்ற நகரங்களில் தூய்மை மற்றும் சுகாதார பணிகள் தொடர்பாக அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தி விட்டு சென்றனர். பொதுமக்களிடமும் கருத்துகள் கேட்டு அவர்கள் தெரிவித்த பதில்கள் மற்றும் ஆன்லைன் முறையில் அளித்த பதில்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் அளித்தனர்.
இந்நிலையில் டெல்லியில் போட்டி முடிவுகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகம் வெளியிட்டது. இதில் தூய்மை நகரங்கள் பட்டியலில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாநகராட்சி முதலிடத்தை பிடித்து உள்ளது. இரண்டாவது இடத்தை சத்தீஷ்கர் மாநிலம் அம்பிகாபூரும், மூன்றாம் இடத்தை கர்நாடக மாநிலம் மைசூருவும் பெற்று உள்ளன. முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் திடக்கழிவு மேலாண்மை, நுண்ணுரம் செயலாக்க மையம் உள்ளிட்ட பல்வேறு சுகாதார பணிகளை முனைப்புடன் செய்து வந்த திருச்சி மாநகராட்சிக்கு 39 -வது இடம் தான் பிடிக்க முடிந்தது.
மொத்த மதிப்பெண்கள் 5 ஆயிரத்தில் திருச்சி மாநகராட்சியால் 3,414 மதிப்பெண்களை தான் எடுக்க முடிந்தது. திருச்சி மாநகராட்சி கடந்த 2016-ம் ஆண்டு தூய்மை நகரங்கள் பட்டியலில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தையும், 2017-ம் ஆண்டு மூன்றாம் இடத்தையும், கடந்த ஆண்டு (2018) 13-வது இடத்தையும் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு திருச்சி அகில இந்திய அளவில் 13-வது இடத்தில் இருந்தாலும் தமிழக அளவில் முதலிடம் கிடைத்தது. இந்த ஆண்டு பட்டியலில் திருச்சி மாநகராட்சிக்கு 39-வது இடமும் கோவை மாநகராட்சிக்கு 40வது இடமும் கிடைத்துள்ளது. குறிப்பிடத்தக்கது.