கஜா புயலில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என்று அரசாங்கங்கள் சொன்னது. பல கிராமங்களில் அரசாங்க வீடுகளுக்காக காத்திருந்தனர் விவசாயிகள். உடைந்து வீடுகளுக்கு கூட முறையான நிவாரணம் கிடைக்கவில்லை என்று புலம்பினார்கள். முத்துப்பேட்டையில் ஒருவர் தனது வீட்டுக்கு நிவாரணம் கேட்டு கேட்டு அலைந்தார் கிடைக்கவில்லை அதனால் கஜா நினைவு இல்லம் என்று உடைந்த வீட்டை நினைவுச்சின்னமாக மாற்றிவிட்டார்.
இந்த நிலையில்தான் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கட்டயங்காடு உக்கடை அம்பாள்புரம் கிராமத்தில் கஜா புயலால் ஏராளமான குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டது. இதையடுத்து நிவாரணப்பணிகளுக்காக வந்தவர்கள் வீடுகளின் அவலநிலையை பார்த்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு துபாய் வாழ் நண்பர்கள் மற்றும் புதுக்கோட்டை விதைக்-கலாம் அறக்கட்டளை சார்பில் வீடு கட்டித்தர முடிவெடுத்தனர்.
அடுத்த சில மாதங்களில் பணிகளை தொடங்கினார்கள். பணிகள் முடிவடைந்த நிலையில் ரூ 25 லட்சம் மதிப்பிலான, 18 புதிய வீடுகளும், 8 புதுப்பிக்கப்பட்ட வீடுகள் என மொத்தம் 26 பயனாளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விழா வைத்து ஒப்படைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு துபாய் வாழ் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் தேவகோட்டை ஏ.என்.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேராவூரணி கோ.செல்வம், சேதுபாவாசத்திரம் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் புதுக்கோட்டை சொக்கலிங்கம், டாக்டர் ராமசாமி, பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீடுகளை ஒப்படைத்தனர். நிகழ்ச்சியில் விதைக்-கலாம் அறக்கட்டளை உறுப்பினர்கள், கிராம முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கட்டயங்காடு உக்கடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், துபாய் வாழ் நண்பர்கள் மற்றும் புதுக்கோட்டை விதைக்-கலாம் அறக்கட்டளை சார்பில், ரூ 40 ஆயிரம் மதிப்பில் பள்ளியில் அமைக்கப்பட்ட தரைத்தளம் மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
புயலில் ஒட்டுமொத்த கிராமங்களும் பாதிக்கப்பட்டு நடக்க கூட வழியில்லாமல் நின்ற போது தங்களுக்கான பாதைகளை தாங்களே உருவாக்கிக் கொண்ட இளைஞர்கள் மீட்புப் பணிக்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்கவில்லை. களமிறங்கினார்கள் சாலைகளை சீரமைத்து மின்கம்பங்களை நட்டனர். ஆனால் பாதிக்கப்பட்ட அடுத்த நாளே கொடுக்க வேண்டிய உணவு, உடை போன்ற அரசு நிவாரணப் பொருட்களை ஒருமாதம் கடந்து பாதிப்பேருக்கு கொடுத்தனர். ஆனால் இளைஞர்கள் களமிறங்கியதால் அரசாங்கத்தின் பணி 75 சதவீதம் முடிந்திருந்தது. இப்போது வீடுகள் கட்டிக் கொடுத்து வருகிறார்கள். பாராட்டுவோம் இளைஞர்கைளை.