திருச்சியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகளை மாணவர்களுக்கு விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பாப்பாக்குறிச்சி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ரவி. இவருக்கு பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கும்பல் போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகள் விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து இது குறித்து ரவி திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஒரே நாளில் போதை மாத்திரை விற்பனை செய்த இரண்டு ஆசாமிகளை அவர்களின் வீடுகளில் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 20 போதை மாத்திரைகள் மற்றும் ஐந்து சிரஞ்சிகளை கைப்பற்றினர். விசாரணையில் கைதானவர்கள் வடக்கு காட்டூர் அண்ணா நகர் கண்ணதாசன் தெரு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 36) மற்றும் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (வயது 22) என்பது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த முத்து மணி (வயது 26) என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கூட்டாளிகளான இவர்கள் 3 பேரும் சேர்ந்து போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகளை பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ரகசியமாக சப்ளை செய்து வந்துள்ளனர். கைதான 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.