தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அதேவேளையில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதாக தகவல்களும் வந்துகொண்டிருக்கின்றன. தேர்தல் ஆணையம் இதனைக் கடுமையாக கண்காணித்து தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி திருச்சி பெட்டவாய்த்தலை சோதனைச் சாவடி அருகே, முசிறி அதிமுக வேட்பாளரின் மகன் ராமமூர்த்தியின் காரும், அடையாளம் தெரியாத மற்றொரு காரும் நின்றுகொண்டிருந்தன. அதில் வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனைப் பார்த்த தேர்தல் அதிகாரிகள் அவர்களுடைய கார்களை சோதனை செய்ய முயன்றனர். அப்போது அடையாளம் தெரியாத காரில் வந்தவர்கள் காரோடு தப்பிச் சென்றனர். மேலும் அங்கிருந்த வேட்பாளர் மகன் ராமமூர்த்தியின் காரை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் நின்றுகொண்டிருந்த இடத்தில் சாலையின் ஓரத்தில் ஒரு மூட்டை கிடப்பதை அதிகாரிகள் பார்த்தனர். அதனை எடுத்து சோதனை செய்தபோது அதில், 1 கோடி மதிப்பிலான 500 ரூபாய் பண கட்டுகள் இருந்தன. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வேட்பாளரின் மகன் காரில் வந்த ரவிச்சந்திரன், சத்தியராஜா, ஜெயசீலன், கார் ஓட்டுநர் சிவகுமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில், தங்களுக்கும் இந்தப் பணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். இதனால், அவர்களை அங்கிருந்து அனுப்பிய தேர்தல் அலுவலர்கள், பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், சப்-கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்டோரை தேர்தல் ஆணையம் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றியது. அதன்பின் புதிய மாவட்ட ஆட்சியராக திவ்யதர்ஷினி, மாவட்டக் காவல்துறை காண்காணிப்பாளராக மயில்வாகனன் உள்ளிட்டோர் பொறுப்பேற்றனர். தற்போது இவர்கள் பொறுப்பேற்ற உடன் தனிப்படை அமைத்து விசாரிக்க துவங்கியதும், இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. யாரும் உரிமை கோராத அந்தப் பணம், கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்று வழக்கின் திசை மாற துவங்கியுள்ளது.
இதுதொடர்பாக தற்போது 6 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமாக அன்றே நக்கீரன் இதழில் பெட்டவாய்த்தலை சோதனைச் சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த 3 மூட்டைகளில் 1 மூட்டையில் இருந்த பணம் மட்டுமே தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு, கணக்கில் காட்டப்பட்டுள்ளதாக கூறியிருந்தோம். தற்போது வழக்கானது திசை மாறி, வேட்பாளருக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்ட பணத்தை எடுத்துக்கொண்டு செல்லும் வழியில் ரவுடி கும்பல் கொள்ளையடித்து, விட்டுச் சென்ற பணத்தைதான் பெட்டவாய்த்தலை சோதனைச் சாவடியில் அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தெரியவருகிறது.
மேலும், அதிகாரிகளே அந்தப் பணத்தை முழுமையாக கணக்கில் காட்டாமல், ஒரு மூட்டையில் இருந்ததை மட்டும் கணக்கில் காட்டியுள்ளனர். எனவேதான் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக ஒரு புரளியும் கிளம்பியுள்ளது. மற்றொரு கோணத்தில், வேட்பாளருக்குப் பணம் பிரித்து கொடுப்பதை அறிந்த கொள்ளையர்கள், கட்சிகாரர்களைப் போல சென்று, பணம் பிரித்து கொடுக்கும் இடத்தில் இருந்து கொள்ளையடித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கு தற்போது பல்வேறு திசைகளை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது. எனவே இந்த வழக்கு தீர விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதேவேளையில் தற்போது 6 பேரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், புதிய தகவல்கள் எதுவும் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.