Skip to main content

புதுக்கோட்டையில் மூன்றாவது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்... பொதுமக்கள் தவிப்பு!

Published on 27/02/2021 | Edited on 27/02/2021

 

Transport workers struggle continues for the third day in Pudukkottai ... Public suffering

 

14 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில், பொதுப்போக்குவரத்து வசதி இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தாலும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்றாவது நாளாக தொடர்ந்து இன்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கும் 385 அரசு பேருந்துகளில் 40 பேருந்துகளே இயக்கப்படுகிறது. தற்காலிகப் பணியாளர்களை வைத்து பேருந்துகளை இயக்கலாம் என அதிகாரிகள் முடிவு எடுத்தாலும் நேற்று ஆலங்குடி பகுதியில் ஏற்பட்ட அரசு பேருந்து விபத்து பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று புதுக்கோட்டையில் வெறும் 15 சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பொதுப் போக்குவரத்து வசதி இல்லாமல் அவதிப்பட்டுள்ளனர். மேலும் போக்குவரத்துக்காக தனியார் பேருந்துகளை பொதுமக்கள் நாடியுள்ளார். அதேபோல் சென்னையிலும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் எப்பொழுதுமே காலை 5 மணியில் இருந்தே பேருந்து சேவை தொடங்கும் நிலையில், தற்பொழுது குறைந்த பேருந்துகளே இயக்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.