போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாகக் கடந்த டிசம்பர் மாதம் நோட்டீஸ் வழங்கி இருந்தனர். மேலும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அரசு சார்பில் இன்னும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இருந்தனர்.
இதற்கான பேச்சுவார்த்தை கடந்த டிசம்பர் 27 ஆம் தேதியும், ஜனவரி 3 ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை. மேலும் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் போராட்ட அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.
அதனைத் தொடர்ந்து போக்குவரத்துத்துறை சார்பில், ஊழியர்களுக்குப் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதில், “போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வருகை தர வேண்டும். ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். எனவே ஊழியர்கள் பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு என அனைத்து விதமான விடுப்புகளையும் தவிர்த்து, பணிக்கு வந்து சீரான பேருந்து இயக்கம் அமைவதை உறுதி செய்ய வேண்டும். சேம மற்றும் தினக்கூலி பணியாளர்கள் கட்டாயமாக பணிபுரிய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்கள், வரும் 9 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், துறைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்த ஆலோனைக் கூட்டத்தில் போக்குவரத்து ஊழியர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காகப் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புகளின் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும், இந்த பேச்சுவார்த்தை நாளையோ, நாளை மறுநாளோ நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.