
சேலத்தில், மாட்டு வியாபாரியைத் தனியாக அழைத்துச் சென்று, 65 ஆயிரம் ரூபாயைப் பறித்துக்கொண்ட இரண்டு திருநங்கைகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள எம்.செட்டிப்பட்டியைச் சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவர், மாடு வியாபாரம் செய்து வருகிறார். இவர், மாடுகளை விற்பனை செய்வதற்காகக் கேரளா சென்றிருந்தார். அங்கு மாடுகளை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த 1.65 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு, ஏப். 23ம் தேதி இரவு சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு நிறுத்தி இருந்த தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓமலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
சேலம் 5 சாலை அருகே சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த திருநங்கைகளிடம் பேச்சு கொடுத்துள்ளார் அந்த வாலிபர். பிறகு, இரண்டு திருநங்கைளை அழைத்துக்கொண்டு அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றார். திருநங்கைகளுடன் ஒரு மணி நேரம் இருந்துவிட்டு, வீடு திரும்பினார். அங்கு தனது தந்தையிடம் மாடு விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை எடுத்துக் கொடுத்தார். அப்போதுதான் அவருக்கு, தான் வைத்திருந்த பணத்தில் 65 ஆயிரம் ரூபாய் மாயமாகி இருப்பதும், ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே இருப்பதும் தெரிய வந்தது.
திருநங்கைகள்தான் தனது பணத்தை எடுத்திருக்க வேண்டும் என்று சந்தேகித்த அந்த வாலிபர், வீட்டிற்குச் சென்ற வேகத்திலேயே நேராக பள்ளப்பட்டி காவல்நிலையத்திற்கு வந்து புகார் அளித்தார். காவல்துறையினர் அவரை அழைத்துக் கொண்டு 5 சாலை பகுதி சென்றனர். அங்கு அந்த வாலிபர் திருநங்கைகளை அடையாளம் காட்டினார். காவல்துறை விசாரணையில் அந்த திருநங்கைகளின் பெயர் ஹர்சிதா (22), அமிதா (40) என்பது தெரியவந்தது. அவர்களோ, அந்த வாலிபர்தான் தங்களிடம் பணத்தைக் கொடுத்ததாகக் கூறினர். ஆனால் வாலிபரோ, தான் கால்சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டி இருந்தபோது, தனக்குத் தெரியாமல் பணத்தை அவர்கள் திருடி விட்டதாகக் கூறினார்.
விசாரணையில், வாலிபர் சொன்னதுதான் உண்மை எனத் தெரிய வந்தது. பின்னர் திருநங்கைகளிடம் இருந்து 65 ஆயிரம் ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்து, வாலிபரிடம் ஒப்படைத்தனர். அவரை எச்சரிக்கை செய்தும் அனுப்பி வைத்தனர். பணம் பறித்த திருநங்கைகள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.