
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முத்துச்சாமி(32) - மாரியம்மாள்(27) தம்பதியினர். இதில் முத்துச்சாமி கூலி வேலை செய்துவந்தார். மாரியம்மாளின் சகோதரி திருநங்கை வைதேகியும் அவர்களுடனே ஒன்றாக வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த மாதம் ஏப்ரல் 29 ஆம் தேதி முத்துச்சாமி திடீரென மாயமாகியுள்ளார். இதனையடுத்து முத்துச்சாமியை அக்கம் பக்கம், உறவினர்களின் வீடுகள் என பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால், முத்துச்சாமியை எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி மாரியம்மாள் பழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் காணாமல் போன முத்துச்சாமியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த சூழலில் தான் கடந்த 4 ஆம் தேதியில் இருந்து மாரியம்மாளின் சகோதரி வைதேகியும் மாயமாகியிருந்தார். இதனிடையே வீட்டின் அருகே இருந்த மண் குவியலை போலீசார் தோண்டி பார்த்தனர். அப்போது முத்துச்சாமி கொலை செய்யப்பட்டு அவரது உடலை அங்கே புதைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசாரின் கவனம் திடீரென மாயமான வைதேகி பக்கம் மீது திரும்பியது.
இதையடுத்து வைதேகியை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். அதில் வைதேகியின் செல்போன் சிக்னல் பெங்களூரூவில் இருந்ததால் தனிப்படை போலீசார் பெங்களூரூ விரைந்து சென்றனர். அங்குத் தலைமறைவாக இருந்த வைதேகியை பிடித்து பழனி அழைத்து வந்தனர். பின்பு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சகோதரியின் கணவர் முத்துச்சாமி, தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் அவரை கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டேன். பின்பு அவரது உடலை யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்கும் வகையில் வீட்டின் அருகே புதைத்ததாக வாக்குமூலம் அளித்தார்.
இதுகுறித்து வைதேகி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். பாலியல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரத்தில் சகோதரியின் கணவரை திருநங்கை அடித்துக் கொன்ற சம்பவம் பழனி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.