
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று இளைஞர்கள் சிலர், திருநங்கை ஒருவர் தங்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக புகார் அளித்தனர்.
திருநங்கை ரோஸ் என்ற பபிதா ரோஸ், கடந்த 2007ஆம் ஆண்டு தனது குடும்பத்தை பிரிந்து உடுமலைக்கு வந்தார். அங்கு திருநங்கைகளுடன் சேர்ந்து வாழ்ந்துவந்தார். பின் அவர், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரை ஒருவர் பின் ஒருவராக திருமணம் செய்திருக்கிறார். அந்த இளைஞர்களிடம் தனது பெயர் ஹேமா என்றும், நாகலாந்தில் துணை ஆட்சியராக பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். பபிதா ரோஸிடம் அவர்கள் இருவரும் பணம், நகைகளை கொடுத்துள்ளனர்.
சுமார் 4 மாதங்கள் கடந்த நிலையில் அவர்களிடத்திலிருந்து பபிதா ரோஸ் தனியாக வந்துள்ளார். அதன்பின் அவர், தனது பெயரை ஹேமா என மாற்றிக்கொண்டு தென்காசிக்கு சென்றுள்ளார். பின் அங்கு ராமச்சந்திர பட்டினத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவருடன் பழகியுள்ளார். ராம்குமார் தென்காசியில் வட்டி தொழில் செய்துவருகிறார். அவரிடம், தான் ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர் என்றும் சொத்து தகராறு காரணமாக குடும்பத்தினர் தன்னை வீட்டை விட்டு விரட்டி விட்டதாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இவரின் கதையை கேட்ட ராம்குமார் குடும்பத்தினர், பபிதா ரோசை அவர்களது வீட்டருகே வாடகை வீட்டில் தங்க வைத்தனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பபிதா ரோஸ், அவர்களது குடும்பத்துடன் உறவு கொண்டாடி வந்தார். இதனிடையே அவர்களிடம் 1 லட்ச ரூபாய், 2 லட்சம் ரூபாய் என வட்டிக்கு வாங்கி அதனை முறையாக வட்டியுடன் செலுத்தி வந்தார். அப்போது, தான் வீட்டுமனையொன்று வாங்கியுள்ளதாகவும் அதனை கிரையம் செய்ய 60 லட்சம் பணம் தருமாறு கேட்கவே ராம்குமார் 60 லட்ச ரூபாயை பபிதா ரோசிடம் கொடுத்தார். பணத்தைப் பெற்றுக்கொண்ட பபிதா ரோஸ் அங்கிருந்து தப்பியுள்ளார்.
அங்கிருந்து திருச்சிக்கு வந்த பபிதா, திருச்சி கே.கே. நகரைச் சேர்ந்த வெற்றிச்செல்வி என்ற மூதாட்டிக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை, 38 லட்ச ரூபாய்க்கு விலை பேசி 28 லட்ச ரூபாயை முன்பணமாக வழங்கினார். பத்திரப்பதிவு செய்த பிறகு மீதமுள்ள 10 லட்ச ரூபாய் தராமல் ஏமாற்றி விட்டார். பபிதா ரோஸ் ஆசை வார்த்தைகள் கூறி பல ஆண்களுடன் தொடர்பில் இருந்து, திருமணங்கள் செய்து இதுவரை 50க்கும் அதிகமானவர்களை ஏமாற்றியுள்ளார். ஏமாற்றப்பட்டவர்களின் 4 பேர் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. பபிதா ரோஸ், தென்காசி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், தஞ்சை, தர்மபுரி, திருச்சி என பல்வேறு மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து 2 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 2 கிலோ தங்கம் ஏமாற்றியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
பாதிக்கப்பட்டவர்கள், ஒன்று திரண்டு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர். இது குறித்து பேசிய பாதிக்கப்பட்டோர் ஏமாற்றிய பபிதா ரோஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடம் இருந்து பணம், நகைகளை திரும்பப் பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.