அண்மையில், சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடியான கருக்கா வினோத் என்பவர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி அதைப் பற்றவைத்து ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் வீசி இருக்கிறார். அடுத்தடுத்து இரண்டு பாட்டில்களை வீசியதாகக் கூறப்பட்டது. உடனடியாக அங்கு இருந்த பாதுகாப்பு போலீசார் விரைந்து சென்று கருக்கா வினோத்தை பிடித்து கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர், நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட கருக்கா வினோத்தை போலீஸார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து நவ.15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் ரவுடி கருக்கா வினோத்தை சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னையில் உள்ள ஒரு கோவிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாரிமுனை பகுதியில் வீரபத்ர சுவாமி கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில், இன்று (10-11-23) காலை மதுபோதையில் இருந்த ஒருவர் அந்த கோவிலின் உள்ளே சென்றுள்ளார். அப்போது திடீரென்று அவர் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை கோவிலுக்குள் வீசியதாகக் கூறப்படுகிறது. இதனை பார்த்த மக்கள் கூச்சலிட்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். மேலும், அங்கு மதுபோதையில் இருந்த நபரை பிடித்து, கைது செய்தனர்.
இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசிய நபர் முரளி என்பது தெரியவந்தது. மேலும், இவர் அந்த கோவில் அருகே பழக்கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், இவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், சாமி தனக்கு எதுவும் செய்யவில்லை என்றும் அவர் பெட்ரோல் குண்டை கோவிலுக்கு வீசியதாகக் காவல்துறையினரிடம் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.