சென்னை யானை கவுனியைச் சேர்ந்த சூர்யா என்பவர் கீழ்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் உடல் எடையை குறைப்பதற்காக திருமணமான பெண் ஒருவர் தினமும் அந்த ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். பெண்ணின் கணவர் வடமாநிலத்தில் வேலை செய்துவருகிறார். இதனிடையே, சூர்யாவிற்கும் அந்த பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் நாளடைவில் இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் சூர்யாவின் நடவடிக்கைகள் பிடிக்காத காரணத்தினால் ஜிம் நிர்வாகம் அவரை பணியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் நீக்கியது. இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணும் சூர்யாவுடன் பேசுவதை தவிர்ந்துவந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சூர்யா, ஜிம்மிற்கு வந்த அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் தன்னுடன் பழைய மாதிரி பேசவேண்டும் இல்லையென்றால் நெருங்கிப் பழகியபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், கீழ்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் சூர்யா மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சூர்யா மீது ஏற்கனவே கீழ்பாக்கம் காவல்நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.