தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இன்று காலை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் சிலைக்கு பிறந்தநாளை ஒட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை நடிகர் விஜய் சந்திக்க இருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, 'காவல்துறை அவருக்கு அனுமதி அளித்துள்ளது எனவே அவர்கள் செல்கிறார். அங்க இருக்கிற மக்கள் பாதிக்கக் கூடாது என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு' என தெரிவித்தார்.
மேலும் பேசிய செல்வப்பெருந்தகை, 'சனாதனத்தை எதிர்க்க தமிழக வெற்றிக் கழகத்தினுடைய தலைவர் விஜய் திட்டமிட்டு இருந்தால் அவர் இந்தியா கூட்டணிக்கு வரவேண்டும். இந்தியா கூட்டணிதான் சனாதனம், ஆர்.எஸ்எஸ்-ஐ எதிர்த்து இயக்க பணியில் கூட்டணியில் இருந்து வருகிறோம். விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும். அதுதான் அவருடைய கொள்கைக்கும் கோட்பாட்டிற்குமான நல்ல முடிவாக இருக்கும்.
அவர் மாநாட்டில் பேசியது போல் எதை வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் ஒழித்து விடலாம். ஓரங்கட்டி விடலாம். ஆனால் மதவாத சக்திகளை இந்துத்துவா சக்திகளை அகற்ற வேண்டும் என விஜய் முன்னெடுப்பார் என்றால் அவர் இந்தியா கூட்டணிக்கு வருவது தான் அவருக்கும் நல்லது அவருடைய கோட்பாடுக்கும் நல்லது. இதை நான் ஒரு இந்திய பிரஜையாக சொல்ல முடியும்'' என்றார்.