பிரபல ரவுடியான பாம் சரவணன் நேற்று முன்தினம் துப்பாக்கி முனையில் போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்டு இருந்தார். பாம் சரவணன் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்குகளுக்காக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நிலையில் பாம் சரவணனை போலீசார் சுட்டுப் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாம் சரவணனிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. பாம் சரவணனின் சகோதரர் தென்னரசுவின் கொலைக்கு பழி வாங்குவதற்காக பன்னீர்செல்வம் என்ற நபரை காவல் நிலையத்தில் இருந்து கடத்திச் சென்று ஆந்திர மாநிலம் கூடூர் பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரம் வைத்து கொலை செய்து எரித்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இது தொடர்பாக சிஎம்பிடி காவல் நிலையத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிமன்ற காவலில் பாம் சரவணன் உள்ள நிலையில் போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில் தற்பொழுது பாம் சரவணனை ஆந்திர மாநிலம் கூடூர் பகுதிக்கு அழைத்துச் சென்று ஆந்திர காவல்துறை துணையுடன் இணைந்து கொலை குறித்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பன்னீர்செல்வம் ஆற்றங்கரையில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட பகுதியில் ஏதேனும் அறிகுறிகள், தடயங்கள் இருக்கிறதா என்பது தொடர்பாக விசாரிக்க ஆந்திர போலீசாருக்கும் வருவாய் துறைக்கும் சென்னை காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். நீதிமன்ற அனுமதியுடன் பாம் சரவணன் ஆந்திரா அழைத்துச் செல்ல சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே பன்னீர்செல்வம் காணாமல் போன வழக்கை கொலை வழக்காக காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.