Skip to main content

பரங்கிலை ரயில் விபத்துக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்! - பயணிகள் புகார்!

Published on 24/07/2018 | Edited on 24/07/2018

 

சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் நோக்கி மின்சார விரைவு ரெயில் இன்று காலை 8.10 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இதில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பணிக்கு செல்பவர்கள் ஏராளமானோர் பயணித்தனர். விரைவு ரயில் என்பதால் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டும் நின்று செல்லும். மேலும் விரைவு ரயில் என்பதால் செங்கல்பட்டு வரை கல்லூரி மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் இந்த ரயிலில் பயணம் மேற்கொள்வார்கள். ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை என்பதால் இன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்களும் செங்கல்பட்டு வரை இதில் செல்லலாம் என்று பயணித்துள்ளனர். இதனால் இருக்க இடம் கிடைக்காமல் பலர் படிக்கட்டில் தொங்கிகொண்டு பயணம் செய்தனர்.
 

 

 

இந்நிலையில், காலை 8.30 மணி அளவில் பரங்கிமலை ரெயில் நிலையத்தை நெருங்கியபோது, படிக்கட்டில் தொங்கிகொண்டிருந்தவர்களில் இரண்டு பேரின் முதுகில் மாட்டியிருந்த பை பக்கவாட்டில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி மாட்டியதில் இரண்டு பேர் முதலில் விழுந்துள்ளனர். அடுத்தடுத்து சிலர் விழுந்துள்ளனர். இதனைக் கண்ட பயணிகள் அலறி கூச்சலிட்டனர். ரயில் பெட்டியில் உள்ள சங்கிலியை பிடித்து இழுந்ததும் ரயில் நிறுத்தப்பட்டது.
 

பலத்த காயமடைந்த அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். 7 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் நவீன்குமார், பரத், சிவக்குமார் என தெரிய வந்துள்ளது. உயிரிழந்த மேலும் இரண்டு பேர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

இதேபோல் நேற்று இரவும் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் உள்ள பக்கவாட்டு சுவரில் மோதியதியல் 2 பேர் உயிரிழந்தனர். 
 

 

 

பக்கவாட்டு சுவரை இடிக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. பக்கவாட்டு சுவரை உடனடியாக இடிக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த விபத்துக்கு கூட்ட நெரிசல் காரணம் இல்லை. ரயில்வே அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம். நீண்ட நாட்களாக கல்லூரி செல்லுபவர்களுக்காகவும், பணிக்கு செல்பவர்களுக்காகவும் காலை வேலையில் இதேபோல் இன்னொரு விரைவு ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் ரயில்வே அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கூட்ட நெரிசலுக்கு ஏற்றாற்போல் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அதிகாரிகள்தான் அதிகாரிகளின் அலட்சியமே 5 பேரின் பலிக்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். 

சார்ந்த செய்திகள்