உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து காணப்படுகின்றது. சென்னை அதிக பாதிப்புக்களுடன் முதல் இடத்தில் இருந்து வருகின்றது. சமீப நாட்களாக மதுரையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகின்றது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக முழு ஊரடங்கு அங்கு அமலில் உள்ளது. நேற்று மட்டும் 400க்கும் மேற்பட்ட கரோனா பாதிப்புகள் அங்கு பதிவாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது விருதுநகர் மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு அதிகப்படியாக இருந்து வருகின்றது. நேற்று மட்டும் 191 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 10 கர்ப்பிணிகளுக்கும் நோய் தாக்குதல் உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன்மூலம் இதுவரை அங்கு நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,351 ஆனது. இதற்கிடையே இன்று இதுவரை 141 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,492 ஆக அதிகரித்துள்ளது.