தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும் போது, சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களைப் பதிவேற்றும் நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் அரசு காலிப் பணியிடங்கள் அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்படுகின்றன. இதில் குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 4 பதவிகள் தவிர, பிறகு அனைத்து நேரடி நியமனங்களுக்கும் விண்ணப்பிக்கும் போதே புதிய நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளதாக தேர்வாணையத்தின் செயலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒரு குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிக்கும் போது, அப்பணிக்கு தேவையான கல்வி சான்றிதழ்கள் மற்றும் சாதி சான்றிதழ் உள்ளிட்ட பிற ஆவணங்களையும் இணைய விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். எனவே, விண்ணப்பத்தார்கள் அனைவரும் தங்களது சான்றிதழ்களை முன்னதாகவே ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வுக்கு பின்னர் பதிவேற்றம் செய்வது தொடர்பாக, தனியாக எந்த அறிவிப்பும் வெளிப்படாது என்பதால், தேர்வர்கள் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தெரிவு முடிவுகளைத் துரிதப்படுத்தும் வகையில், நடைமுறையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.