தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் 14 நாட்கள் அரசுமுறை பயணமாக வெளிநாட்டுக்கு சென்றார். முதற்கட்டமாக லண்டன் சென்றுள்ள முதல்வர், அடுத்து அமெரிக்கா மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று தொழில் அதிபர்களையும், வெளிநாட்டு வாழ் தமிழர்களை சந்திக்கிறார். முதல்வருடன், தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்றுள்ளார். லண்டன் சென்ற முதல்வருக்கு அங்குள்ள தமிழர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
இந்நிலையில் தொற்றுநோய் நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் லண்டன் "LSHTM" நிறுவனத்தை பார்வையிட்ட முதல்வர், மருத்துவர்களுடன் கலந்துரையாடினார். "டெங்கு, மலேரியா நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் அந்நோய்களை கையாளும் வழிமுறைகள்" தொடர்பாக முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதனையடுத்து லண்டன் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையின் கிளைகளை தமிழ்நாட்டில் நிறுவிட தமிழக அரசு மற்றும் கிங்க்ஸ் கல்லூரி மருத்துவமனை இடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒரே நாளில் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
இதனிடையே தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் 7 நாள் அரசு முறை வெளிநாட்டு பயணமாக முதற்கட்டமாக பின்லாந்து சென்றுள்ளார். அங்கு உலக அளவில் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஆல்டோ பல்கலைக்கழகத்திற்க்கு (AALTO UNIVERSITY) சென்று பேராசிரியர்களிடம் கல்வி கற்றல், கற்பித்தல் குறித்து ஆய்வு மற்றும் ஆலோசனை செய்தார். அதனை தொடர்ந்து பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் உள்ள இந்திய அரசு தூதரகத்தில் தலைமை இந்திய அரசு தூதர் வாணி ராவ் IFS சந்தித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார்.