‘பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்தது’ எனச்சொல்வது, ஒரு கிராமத்தில் நடந்த கொள்ளைச் சம்பவத்துக்குப் பொருந்திப்போகிறது. எப்படியென்று பார்க்கலாம்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை 100 நாள் வேலைத்திட்டம் என்கிறோம். பொதுவேலை செய்ய விருப்பம் உள்ள கிராமப்புறத்தினருக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு, கட்டாய சிறப்புத்திறனில்லா உடலுழைப்பு வேலை வாய்ப்பு, இத்திட்டத்தின் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மக்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும் வகையில் இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஊரக ஏழை மக்களின் வேலைக்கான உரிமை நிலை நாட்டப்படுகிறது; அம்மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படுகிறது என்றெல்லாம் அத்திட்டத்தின் பலன்கள் குறித்துப் பெருமிதமாகப் பேசப்படுகிறது.
நல்ல திட்டம்தான்! நடைமுறைப்படுத்துவதிலோ கோளாறும் குளறுபடிகளுமாக உள்ளன. முறைகேடு, ஊழல் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். மக்களின் உழைப்பு குறித்த விஷயத்துக்கு வருவோம். இயந்திரத்தின் உதவியின்றி, முழுக்க முழுக்க மனித உழைப்பினால் மட்டுமே பணிகளை நிறைவேற்ற வேண்டியிருப்பதால், உடல் தகுதி அவசியமாகிறது. ஆனால், நடைமுறையில் எதுவும் பின்பற்றப்படுவதில்லை.
வேலையெல்லாம் பெரிதாகப் பார்க்க வேண்டியதில்லை. பெயரைப் பதிவு செய்து பயனாளிகளாக அடையாள அட்டை பெற்றுவிட்டால் போதும். ஊதியம் கிடைத்துவிடும். இந்தக் கூத்தெல்லாம் நம் கண்ணெதிரேதான் நடக்கிறது. 100 நாள் வேலைக்குச் செல்பவர்களில் பலரும் அங்கங்கே அமர்ந்து பேசியே பொழுதைக் கழிக்கிறார்கள். அந்த நேரமானது வேலை பார்த்த கணக்கில் சேர்ந்துவிடும். சிலரோ, பாதையோரம் கிடக்கும் செடிகள், முட்களைக் களைந்து பெயரளவுக்கு வேலை பார்க்கின்றனர். இத்திட்டத்தின் மூலம் குளங்களைத் தூர்வாருவதற்கு அரசாங்கம் சம்பளம் தருகிறது. குளத்தை நன்றாக வெட்டினால் நமக்குத்தானே நல்லது என்று இத்திட்டத்தின் பயனாளிகளில் எத்தனைபேர் உண்மையாக வேலை செய்கிறார்கள் என்பது அவரவருக்கே வெளிச்சம்!
சரி, விவகாரத்துக்கு வருவோம்! விருதுநகர் மாவட்டம் – மல்லாங்கிணறு அருகிலுள்ள தோணுகாலில் ஏலச்சீட்டு மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் முருகன். காலை 9 மணிக்கெல்லாம் சாமி கும்பிடுவதற்கு இருக்கன்குடி கோவிலுக்கு சென்றுவிட்டார். அவருடைய மனைவி கருப்பாயி 100 நாள் வேலைக்குப் போய்விட்டார். அந்த நேரத்தில், இவர்களின் மகன் மாரிசெல்வம் வீட்டின் மாடியில் லேப்டாப்பில் மூழ்கியிருந்தார். பழைய துணிகளை வாங்குவதுபோல் அந்தக் கிராமத்தை வலம் வந்த மூன்று பெண்களுக்கு கருப்பாயி வீட்டின் கீழ்த்தளத்தில் யாரும் இல்லாதது, கொள்ளையடிப்பதற்கு வசதியாகிப்போனது. பிறகென்ன? நகைகள் மற்றும் பணத்தை வாரிச்சுருட்டிக்கொண்டு அந்த 3 பெண்களும் மாயமாகிவிட்டனர். மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் தன் வீட்டில் கொள்ளைபோனது 25 பவுன் நகைகள் என்றும், ரொக்கம் ரூ.6.5 லட்சம் என்றும் புகார் அளித்திருக்கிறார் முருகன்.
“வீட்டில் ரொக்கமாக இத்தனை லட்சங்கள் இருந்தும், 100 நாள் வேலைக்குப் போயிருக்கிறாரே கருப்பாயி! வசதிக்கு ஒரு குறைவும் இல்லாத நிலையில், பெயருக்குத்தானே வேலை என்று, அரசாங்கம் தரும் நூறு, இருநூறு ரூபாய் கூலிக்கு ஆசைப்பட்டு லட்சங்களை இழந்துவிட்டாரே!” என அந்த கிராமமே முணுமுணுக்கிறது.
கருப்பாயியை விடுங்கள்! அவளும் மனுஷிதான்! கவிதா போன்ற இயற்கை ஆர்வலர்கள் “விவசாயம் அழிந்ததற்கு முதற்காரணம் 100 நாள் வேலைத்திட்டம்தான்..” என்று குற்றம் சாட்டுகின்றனர்.
100 நாள் வேலைத்திட்டம் என்ற பெயரில், வசதி படைத்தவர்களுக்கும் கூலி கொடுத்து, அரசுப் பணத்தை விரயம் செய்துவரும் அரசாங்கத்தையும், அதிகாரிகளையும், அரசியல்வாதி களையும்தான் குற்றம் புரிவோராக நாம் பார்க்க வேண்டியதிருக்கிறது. அவர்கள் திருந்துவது, அவர்களைத் திருத்துவது, நடக்கிறதோ என்னவோ? 100 நாள் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் தரும் கூலிக்கு உண்மையாக உழைக்கும் சிந்தனை மக்களுக்கு வரவேண்டும்; செயல்படுத்தவும் வேண்டும். அப்போதுதான், நாட்டு நலனில் நமக்கும் பங்கிருக்கிறது என்பதை உணர்ந்திட முடியும்.